Nanguneri, vikravandi by election results 2019 : தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுவையின் காமராஜர் நகர் தொகுதிகளில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்ற நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாங்குநேரி இடைத்தேர்தல்
நாங்குநேரியில் எம்.எல்.ஏவாக இயங்கி வந்த எச். வசந்தகுமார், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை தோற்கடித்து மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இது நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விழுப்புரம் தொகுதியில் அமைந்திருக்கிறது விக்கிரவாண்டி தொகுதி. இதன் எம்.எல்.ஏவாக செயல்பட்டு வந்த ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல்
இந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பலத்த பிரச்சாரங்களை மேற்கொண்டனர் அதிமுக மற்றும் திமுக கட்சிகள். அவர்களின் கூட்டணி கட்சியினரும் தங்களின் ஆதரவை வேட்பாளர்களுக்கு அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
வேட்பாளர்கள்
நாங்குநேரியில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொகுதியில் எச். வசந்தகுமாரின் சகோதரர் குமரி அனந்தன் வேட்பளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சோனியா காந்தி ரூபி மனோகரை வேட்பாளராக அறிவித்தார். அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டியை சேர்ந்த நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் போட்டியிட்டார். பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரி நாடார் உட்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். அதே போன்று திமுக சார்பில் புகழேந்தி அறிவிக்கப்பட்டார்.
எதிர்பார்ப்புகளும் பதிவான வாக்குகளும்
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை வன்னியர்களும், பட்டியல் இனத்தவர்களும் அதிகமாக வாழும் பகுதி. இங்கு வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக இட ஒதுக்கீடு உருவாக்கித்தரப்படும் என்றும், வன்னியர்களின் உரிமைகளுக்காக போராடிய தலைவர் ஏ. கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற வாக்குறுதிகளை எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் முன்வைத்தார். ஆனால் அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனங்களை பதிவு செய்தார். ஆட்சியில் இருக்கும் போதே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டும் என்று கூறினார். பட்டியல் இன மக்களின் பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றும் பிரச்சாரத்தில் உறுதி கூறப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டணி திமுகவுக்கு பலம் சேர்க்கும், பாமக கூட்டணி அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என்ற வகையில் தான் தேர்தலே அணுகப்பட்டது.
நாங்குநேரியில் வேலை வாய்ப்பு, மேம்பாடு, விவசாயிகளின் கோரிக்கைகள் போன்ற பிரச்சனைகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நதிகள் இணைப்பு, வாழை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இரு தரப்பில் இருந்தும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. பட்டியல் இனத்தை சேர்ந்த 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு திமுக வலியுறுத்தும் என்று முக ஸ்டாலின் பிரச்சாரத்தில் அறிவித்தார். இருப்பினும் நாங்குநேரியில் இருந்த 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக தேர்தலை புறக்கணித்தனர். குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்த மக்களை தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வீடுகளில் கறுப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தலையும் புறக்கணித்தனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்காளர்களை கொண்டுள்ளது இந்த தொகுதி. ஆண்கள் 80,500 பேரும் பெண்கள் 90,122 பேர்கள் உட்பட மொத்தம் 1,70,624 வாக்களர்கள் மட்டுமே தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியதை உறுதி செய்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. இந்த வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது எண்ணப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டது. இங்கு மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். 1,88,659 வாக்குகள் பதிவாகியுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 81% வாக்குகளே பதிவானது. ஆனால் தற்போதைய தேர்தலில் 84.36% வாக்குகள் பதிவாகியுள்ளது. விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் எஞ்சினியரிங்க் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டன.
வெற்றியாளர்கள்
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றார். 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் புகழேந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் முத்தமிழ்ச்செல்வன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2913 வாக்குகளைப் பெற்றார்.
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க
அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,562 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 62,229 ஆகும். நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 2,662 வாக்குகளைப் பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.