/tamil-ie/media/media_files/uploads/2019/10/byp.jpg)
Tamil News, Tamil Nadu News, Tamil News Today, Vikravandi by election, vikravandi election, vikravandi formula
Nanguneri, vikravandi by-election results expectations : விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதே போன்று நாங்குநேரி எம்.எல்.ஏவாக பணியாற்றிய வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுற்றவுடன் விக்கிரவாண்டியில் 84.36% வாக்குகள் பதிவாகியதாகவும், நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்தார்.
அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் களம் இறங்கினர். அதே போன்று திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரன் களம் இறங்கினார். விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி களம் இறங்கினார்.
தேர்தல் தேதியன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள் குறித்தும் அறிந்து கொள்ள
நாங்குநேரி தொகுதி
இந்த தொகுதியில் 6 முறை காங்கிரஸூம், 2 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும் வென்றுள்ளது. விவசாயம் இங்கு மிக முக்கியமான தொழில் ஆதலால் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக வெகுநாட்கள் இருந்து வருகிறது. இதற்கு திமுக முயற்சிகள் எடுக்க, அடுத்து வந்த அதிமுக அரசு அதனை கிடப்பில் போட்டிருக்கிறது. எம்.எல்.ஏவாக காங்கிரஸ் கட்சியின் எச். வசந்தகுமார் பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார். சாலைகள், குடிநீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். நீர் நிலைகளை தூர்வார மக்களுக்கு புல்டோசர் வாகனம் ஒன்றை சொந்த செலவில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இது காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் வலுசேர்க்கும் விதத்தில் அமையும்.
ஆனால் நெல்லை நாங்குநேரி தொகுதிக்கு உட்பட சில கிராமங்கள் நேற்று தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்தன. குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், மற்றும் வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளை சேர்ந்த மக்களை தேவேந்திர குல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்திய அம்மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்கள் இருக்கும் தொகுதிகளில் பதிவான வாக்குகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இம்மக்கள் தேர்தலை புறக்கணிக்க, ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரியில் மொத்தம் 2,38,937 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது வசந்தகுமார் அதிமுக வேட்பாளர் மா.விஜயகுமாரை வெறும் 17,315 வாக்குகளில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. அதே போன்று 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டது திமுக - கூட்டணி கட்சிகள். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதற்கு பின்பாக எம்.பிக்களின் நடவடிக்கைகளும் மக்களுக்கு திருப்திகரமாக அமையும் பட்சத்தில் மீண்டும் அதே கட்சியினருக்கு வாக்களிக்கும் மனநிலையில் அவர்கள் இருக்க சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது. ஆனால் தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் குறிப்பிட்ட பிரிவினரை இணைக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டம் முடிவுகளை வேறாகவும் திசை மாற்றம் செய்யலாம்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்திருக்கிறது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. இங்கு வன்னியர்கள் மிக அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் இந்த கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றவில்லை. ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இம்மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது.
வன்னியர்களுக்கு அடுத்து பட்டியல் இனத்தோர் இங்கு அதிக அளவில் வசித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணி வேட்பாளருக்கான ரவிக்குமாருக்கு சாதகமாக அமைந்தது. பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்றார் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிவாண்டி தொகுதியில் 2,23,000 வாக்காளர்கள் உள்ளனர். 2008ம் ஆண்டின் தொகுதி மறுசீராய்வின் போது இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. 2008ல் சி.பி.எம் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி வெற்றி பெற்றார்.2016 தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் ராதாமணி 63,757 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் 56,845 வாக்குகளை பெற்றார். இங்கு மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக பாமக 41,428 வாக்குகளை பெற்றது. ராதாமணி திமுகவை சேர்ந்தவர் என்பதாலும் அவரின் மரணத்தை தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தப்பட்டது என்பதாலும் திமுகவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கணித்துவிட இயலாது. பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாவும் அமையலாம்.
வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய ஏ. கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்றும், 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய, இரவு பகலாக தொகுதியில் இருந்து தேர்தல் பணியை நடத்தினார் அமைச்சர் சி.வி. சண்முகம். மக்கள் யார் பக்கம் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் அனைவருக்கும் தெரிய வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.