‘இனி என்.டி.ஏ. கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும்’ என ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித்ஷா உத்தரவு பிறப்பித்ததாக வரும் வைரல் வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, பாமக ஆகியன கூட்டணி அமைத்திருக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தப் படிவத்தில், ‘அதிமுக தலைமையிலான கூட்டணி’ என குறிப்பிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மேற்கண்ட இரு கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதும், அதை படித்தும் காட்டினார்.
இந்தச் சூழலில் ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று (பிப்ரவரி 22) மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இது மரியாதை ரீதியிலான சந்திப்பு என பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/amit-sha-at-ramnad-300x200.jpg)
இதற்கிடையே அந்தச் சந்திப்பின்போது, இனி கூட்டணியை, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) என்று அழைக்க வேண்டும்’ என அமித்ஷா கூறியதாக வைரல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வருகிறது. அமித்ஷாவின் அந்த உத்தரவை பாஜக தமிழக தலைவர் தமிழிசை மொழி பெயர்ப்பதாகவும் உள்ளது.
இதன் அர்த்தம், இனி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி என குறிப்பிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என குறிப்பிடப்பட வேண்டும் என்பதாகும். எனினும் இது தொடர்பாக இரு கட்சி வட்டாரத்திலும் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை.
அதிமுக கூட்டணியினர் வெளிப்படையாக இதை அறிவித்தாலோ, அல்லது அடுத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெறும்போதோ இதை அறிந்து கொள்ள முடியும்.
அமித்ஷா சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எதுவும் பதிவிடவில்லை. அதேசமயம் அமித்ஷா இந்த சந்திப்பு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ‘ஓ.பிஎஸ் மற்றும் அதிமுக சீனியர் தலைவர்களுடன் சந்திப்பு இனிமையாக அமைந்தது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணிக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவில் தமிழகத்திலும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதை அமித் ஷா உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.