பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம். பிப்ரவரி 14ம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்தடைந்தார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளாரான இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மேலும் படிக்க : பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்?
இதுவரையில் அந்த பேச்சுவார்த்தை கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தான் என்று நம்பப்பட்ட நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அந்த பேச்சுவார்த்தை கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இல்லை என மறுத்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
சென்னை அடையாறில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார் ”பியூஷ் கோயல், அமைச்சர் தங்கமணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக” அவர் தெரிவித்தார்.
மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுற்ற பின்னர், அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என்று அவர் கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது, இது நடைமுறையில் இருக்கும் ஒன்று தான் என்று ஜெயக்குமார் கூறினார்.