தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது, ட்விட்டர் பக்கத்தில் “தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதிலும் இணைந்து செயல்படுவோம். மேலும், கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் , புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம். கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு எனது பாராட்டுகள்” என்றும் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைக்கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி திமுக மற்றும் காங்கிரஸை ஊழல் கட்சிகள் என்று விமர்சித்திருந்தார்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil