பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு சில தனிப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்தாரே தவிர, செய்தியாளர் சந்திப்பாக நடத்தவில்லை. இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிந்த நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த பிரஸ் மீட் தொடர்பான அப்டேட்களை இங்கு காணலாம்.
பிரதமர் மோடி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை பாஜக தலைவர் அமித்ஷாவிடம் திருப்பி விட்டார். பிரதமர் முன்னிலையில் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறுகையில், ‘நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல. 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளோம். அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். ஐந்து வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி. உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை’ என்றார் மோடி.
அமித்ஷா கூறுகையில், ‘5 ஆண்டுகள் வழங்கிய நலத்திட்டங்கள் வெற்றியைத் தரும். 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். குறிப்பாக தென் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
கோட்சே பற்றி கருத்து கூறிய பிரக்யா சிங் தாகூருக்கு, 10 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது விளக்கத்தை பொறுத்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுக்கும்.
ரபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி சொல்வதற்கெல்லாம் பிரதமர் பதிலளிக்க வேண்டியதில்லை. இதில் விவாதம் நடத்த எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.’ என்றார் அமித்ஷா.
ராகுல் காந்தி பேட்டி
ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘இந்த முறை தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது. பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வசதியாக 7 கட்ட தேர்தலை நடத்த முடிவு செய்தனர். மே 23-ல் மக்கள் தீர்ப்பை மதித்து அதற்கு ஏற்ப தோழமை கட்சிகளுடன் இணைந்து முடிவெடுப்போம்.
அதாவது, மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜக.விடம் உள்ள பணத்திற்கும் எங்களிடம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நடக்கிறது. பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் அம்பலப்படுத்தினோம்’ என்றார் ராகுல் காந்தி.