தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 23 தொகுதிகளிலும் எதிர்த்து எந்த கட்சியுடன் மோதுகிறது, பாமக போட்டியிடும் தொகுதிகளின் நிலவரங்கள் குறித்து தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அக்கட்சி தனித்து போட்டியிட்டு தேர்தலை எதிர்கொண்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் அக்கட்சி 5.3% வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.
இதற்கு அடுத்து வந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதே நேரத்தில், கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அதிமுக ஆதரவுடன் அன்புமணி மாநிலங்களவை எம்.பி ஆனார். இந்த தேர்தலில் பாமக 5.42% வாக்குகளைப் பெற்றது.
இந்த சூழ்நிலையில்தான், பாமக 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜக, தமாக ஆகிய இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் பாமகவுக்கு செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாமக தலைவர் ஜி.கே.மணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், ஜி.கே.மணி பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாமக வேட்பாளர்கள் பட்டியல்பென்னாகரம் - ஜி.கே.மணி
ஆத்தூர் (திண்டுக்கல்) - ம.திலகபாமா
கீழ்ப்பென்னாத்தூர் - மீ.கா.செல்வக்குமார்
திருப்போரூர் - திருக்கச்சூர் கி.ஆறுமுகம்
ஜெயங்கொண்டம் - கே.பாலு
ஆற்காடு - கே.எல்.இளவழகன்
திருப்பத்தூர் - டி.கே.ராஜா
தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
சேலம் மேற்கு - இரா.அருள்
செஞ்சி - எம்.பி.எஸ்.இராஜேந்திரன்
மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிச்சாமி
விருத்தாச்சலம் - ஜே.கார்த்திகேயன்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஏ.வி.ஏ.கஸ்ஸாலி
நெய்வேலி - கோ.ஜெகன்
கும்மிடிப்பூண்டி - எம்.பிரகாஷ்
சோளிங்கர் - அ.ம.கிருஷ்ணன்
கீழ்வேளூர் - வேத.முகுந்தன்
காஞ்சிபுரம் - பெ.மகேஷ்குமார்
மைலம் - சிவக்குமார்
பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 19 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. அதனால், பாமகவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல, பாமக மயிலாடுதுறை, சோளிங்கர் தொகுதிகளில் நேரடியாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், திருப்போரூர் தொகுதியில் விசிகவை எதிர்த்தும், கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்த்து போட்டியிடுகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியை எதிர்த்து பாமக சார்பில் ஏ.எஸ்.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். அதனால், இந்த தொகுதியில் பாமகவுக்கு கடுமையான போட்டி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
விருத்தாச்சலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாமக - திமுக - தேமுதிக இடையே நேரடியான போட்டி நிலவுகிறது.
பாமக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள், பாமக ஆதரவுத் தளமான வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள தொகுதிகளாக உள்ளன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, வன்னியர்களுக்கு 10.5% சதவீத உள் ஒதுக்கீட்டை அளித்ததன் அதிமுக வன்னியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வன்னியர்களின் வாக்குகளும் அதிமுக வாக்குகளும் சேர்ந்து பாமகவுக்கு வலிமை சேர்க்கும் என்று அக்கட்சி நம்புகிறது.
திருப்போரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிகவுக்கும் பாமகவுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக எப்படியாவது வெற்றி பெற்று அமையவுள்ள சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்று தீவிரமாக அக்கட்சியினர் பணியாற்றி வருதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக இந்த சட்டமன்றத் தேர்தலில் களத்தில் அதிக இடங்களில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. அதனால், பாமகவுக்கு போட்டி கடுமையாகவே இருக்கும் என்று கள நிலவரமாக இருக்கிறது. ஆனாலும், தேர்தல் முடிவுகளே யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மாணிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.