தேமுதிக தொகுதியில் பாமக பிரச்சாரம் செய்யுமா? - விஜயகாந்தை சந்தித்த பின் ராமதாஸ் பதில்

அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது, நல்லபடியாகப் பேசினோம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை நேரில் சந்தித்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பலமான கூட்டணி அமைத்திருக்கிறது என்றே சொல்லலாம். முதலில் பாமகவுடன் கைக்கோர்த்த அதிமுக, அக்கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது. அதேசமயம், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக.,வால், அவ்வளவு சீக்கிரம் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை. முக்கிய காரணம் பாமக.  பாமகவைப் போன்று தங்கள் கட்சிக்கும் 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இறுதியில் இந்தா, அந்தா என்று கடந்த வாரம் தேமுதிக – அதிமுக கூட்டணி உறுதியானது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

மேலும் படிக்க – Election 2019: திமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு லைவ்

இந்நிலையில், தேமுதிக – பாமகவுக்கு இடையே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இரு கட்சிகளும் ஒரே தொகுதிகளைக் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா உள்ளிட்டோர் கூட்டாகச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது, நல்லபடியாகப் பேசினோம்” என தெரிவித்தார்.

அதிமுக தலைவர்களும் உடன் வந்திருப்பதால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு, ராமதாஸ் ‘இல்லை’ என பதிலளித்தார். அதேபோல், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பாமக பிரச்சாரம் மேற்கொள்ளுமா? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ், ‘நிச்சயமாக’ என பதிலளித்தார்.

கடந்த காலங்களில் தேமுதிக – பாமக இடையே நிலவிய மோதல் போக்கு 2019 தேர்தல் கூட்டணியால் முடிவுக்கு வந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close