தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை 7 மணியோடு நிறைவடைகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளராக களம் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது, பிரசாரத்தின் போது கடவுள் படங்களை பயன்படுத்தியதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனும், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸை சேர்ந்த மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுவதால், மும்முனைப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், பிரசாரத்தின் போது கடவுள் படங்களை பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, பொதுமக்களிடையே ராமர் வேடமணிந்தவரை காண்பித்து, இந்த கடவுளை வைத்து பலர் அரசியல் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
இதனிடையே, சுயேட்சை வேட்பாளரான பழனிகுமார் என்பவர் கோவையை அடுத்த காட்டூர் காவல் நிலையத்தில் கடவுள் படங்களை வைத்து கமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில், கமல்ஹாசன் மீது மதத்திற்கு இடையே வேற்றுமையை ஏற்படுத்துதல், தேர்தலை பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil