ரிஷி
Prakash Raj Special Interview : காங்கிரஸ் கட்சியோ, வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் என்கிறார்கள். பாஜகவோ மிக எளிமையாக ஆண்டி-இந்து என்று கூறிவிடுகின்றனர். ஆனால் மத்திய பெங்களூரு தொகுதி சந்திக்கும் கல்வி, சுகாதாரம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளை கையாளும் முயற்சியில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் பிரகாஷ் ராஜ். மக்கள் தண்ணீர் மற்றும் வேலைப் பிரச்சனைகளை சந்திக்கும் போது மற்ற பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. சுயேச்சை வேட்பாளரின் சக்தி என்ன என்பதை மக்கள் உணரும் தருணம் இது என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவர் குறிப்பிடும் போதே, மிகப் பெரிய அளவிலான பிரச்சாரம், ஊர்வலம், பேரணி இருக்காது. ஆனால் மக்களுடனான உரையாடல்கள் நிச்சயம் இருக்கும். அவர்களுடனான சந்திப்புகள் அதிகரிக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். அது போலவே தற்ஓது நடந்தும் வருகிறார். கடந்த 6 மாதங்களாக மக்களிடம் பேசி வரும் பிரகாஷ் ராஜ், “மக்கள் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றான ஆட்சியை விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
நான் என்னுடைய உரையாடல்களை நிச்சயம் தொடருவேன். எத்தனை மக்கள் மாற்று ஆட்சியினை விரும்புகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : IE Tamil Exclusive: எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் – பூஜா பிரகாஷ்ராஜ்!
ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றீர்கள் ? ஆனால் தற்போது அரசியலில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். உங்களை மாற்றியது எது ?
இங்கு ஆட்சி அமைக்கும் எந்த கட்சிக்கும் கடுமையான விவாதங்களை முன் வைக்கும் எதிர்க்கட்சியாகத் தான் இருந்திருப்பேன். ஒரு கலைஞன் அதைத்தான் செய்வான். அதனால் தான் ஆரம்பத்தில் வேண்டாம் என்றேன். ஆனால் தற்போது அரசியலில் நான் இறங்க வேண்டியதிற்கான உண்மையான அர்த்தத்தினை கண்டறிந்தேன். அதனால் தேர்தலில் போட்டியிடுகின்றேன். இங்கு நடக்கும் அனைத்து ஊழல்கள் மற்றும் ஆட்சிப் பிரச்சனைகளுக்கான காரணம் தேர்தல் ப்ரோசஸ் தான். என்னைப் போன்ற ஒத்த எண்ணங்கள் கொண்டவர்கள், தங்களின் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியேறினால் தான் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். நாட்டின் ஜனநாயகம் மற்றும் நம்முடைய இழந்த குரலை மீட்டெடுக்க இயலும்.
இது தான் சரியான நேரம். இதை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், நாம் தான் நம் பொறுப்பில் இருந்து விலகியவர்களாக இருப்போம்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?
அவர்கள் அனைவரும் தற்போது நன்கொடை அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் போல் உள்ளனர். நமக்கு நன்கொடைகள் தேவையில்லை. ஒருவர் 72000 ரூபாய் தருகிறேன் என்கிறார். மாற்றொருவரோ 6000 ரூபாய். நியாய் திட்டமும் நம்முடைய பணத்தை நமக்கே திருப்பி அளிக்கின்றாது. உங்களின் 15 லட்சம் ரூபாய் என்ன ஆனது ? அனைத்துமே வாக்கு வங்கிகளை கைப்பற்றத்தான்.
இப்படி ஒரு பிரதமரை பெற்றிருப்பதை நினைத்து நான் அவமானப்படுகின்றேன். உங்கள் கட்சியில் அலி இருந்தால் எங்கள் கட்சியில் பஜ்ரங் பாலி இருக்கிறார் என்கிறார்கள் அவர்களின் கட்சித் தலைவர்கள். மத வேற்றுமைகளையும், கலவரங்களையும் கொண்டு வர காரணம் என்ன ? இது இந்துத் தீவிரவாதம் இல்லையா? கோட்சே யார்? இதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ ஏதாவது பலன் உண்டா? நாட்டின் பிரச்சனைகள் பற்றி பேசுவீர்களா ? அரசியல் என்பதே வாக்களர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் தானே !
பிரதமருக்காக வாக்களியுங்கள் - வேட்பாளருக்காக வாக்களியுங்கள் - உங்களின் தேர்வு எது ?
ஒரு குடிமகனின் பொறுப்ப்பு என்பது ஒரு மக்களவை உறுப்பினரை அவர்களின் தொகுதியில் இருந்து வாக்களித்து தேர்வு செய்வது தான். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். மோடியோ ராகுலோ உங்களின் தொகுதிக்காக வேலை செய்யப்போவதில்லை. உங்கள் தொகுதியின் வேட்பாளரே அதை செய்து முடிப்பார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள், எதற்காக நாம் இந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதற்கான காரணாங்களையும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தர முயல்பவராக இருக்க வேண்டும்.
நம்முடைய அரசியல் சாசனத்தில் கட்சி என்று ஒன்று இல்லை. சரியான மக்கள் சரியான தலைவரை தேர்வு செய்வார்கள்.
எத்தனை பேர் உங்களின் எண்ணங்களை கேட்பார்கள் ?
நான் ஆரம்பிக்கும் போது தனியாகவே தான் ஆரம்பித்தேன். ஆனால் நான் இப்போது தனியாக இல்லை. இக்கட்டான சூழல் என்ற காரணத்திற்காக எதனையும் எதிர்த்து குரல் தரக்கூடாதா ? எனக்கு நன்றாகவே தெரியும் மக்கள் இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத மாற்று அரசியலை விரும்புகின்றார்கள். நானும் கடந்த 6 மாதஙக்ளாக மக்கள் மத்தியில் பேசி வருகின்றேன்.
காங்கிரஸ் கட்சி உங்களை “மதசார்பற்ற வாக்குகளை” பிரிக்கும் வேட்பாளர் என்று கூறுவதைப் பற்றி ?
அவர்கள் தான் மீண்டும் மீண்டும் மதசார்பற்ற தன்மை என்று கூறுகின்றனர். அவர்கள் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவ்வாறு கூற இயலும். பாஜக என்ன செய்கின்றதோ அதையே தான் காங்கிரஸ் கட்சியும் செய்கின்றது. இரண்டு கட்சிகளும் வாக்கு வங்கிகளாகவே சிறுபான்மையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். தண்ணீர் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்திக்க துவங்கினால் இது போன்ற பிரச்சனைகள் பற்றி அவர்களுக்கு பேச நேரம் இருக்காது.
பாஜகவிற்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவராகவே இது வரை இருந்தீர்கள். தற்போது அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டணியே உருவாகியுள்ளது. அதில் நீங்கள் இருப்பீர்களா இல்லையா என்பதைப் பற்றி தீர்க்கமான முடிவு எதையும் நீங்கள் இதுவரை கூறவில்லை.
பிரச்சனைகளை சமாளிக்க ஆதரவாக இருக்க வேண்டும். இதற்காக எந்த கட்சியுடனும் சேர்ந்து இயங்க வேண்டிய அவசியமில்லை. கடந்த 5 வருடங்களில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் வாங்கப்பட்டுவிட்டனர். சுயேச்சை வேட்பாளராக இருந்து என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ஒருவர் கேட்டால், இது வரை பெரும்பான்மையாக ஆட்சி அமைத்து என்ன சாதித்தார்கள் என்று தான் கேட்பேன்.
ஏற்கனவே ரஜினி, கமல் என்று சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துவிட்டனர். தற்போது தமிழ் சினிமா உலகில் இருந்து நீங்களும் அரசியலில் ஈடுபட்டுள்ளீர். திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவசியமாகிறதா ?
இந்த கேள்வியை உங்களால் டாக்டர்களிடமோ, வக்கீல்களிடமோ கேட்டுவிட இயலுமா ? நாங்களும் இந்நாட்டின் பிரஜைகள் தான். அனைவருக்கும் கருத்துகளும், அரசியல் அறிக்கைகளும் உள்ளன. மக்களுக்கு புரிந்த மொழியில், அதை மக்களிடம் கொண்டு சென்றால், மக்கள் அவர்களுக்கு தேவையான தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
ஒரு நடிகரில் இருந்து ஒரு அரசியல்வாதியாக - இந்த மாற்றத்தை எப்படி பார்க்கின்றீர்கள் ?
என்னை ஏன் ஒரு நடிகராக பார்க்கின்றீர்கள். இந்த மாற்றம் ஒரு சுதந்திர உணர்வை தருகின்றது. உங்களின் கதாப்பாத்திரம் மற்றும் வசனங்களால் மட்டுமே நடிகராக மக்கள் மனதில் இருக்க முடியும். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் என் எண்ணங்களாலும், என்னுடைய சமூக பார்வையாலும் நான் அறியப்பட்டுள்ளேன். நான் எப்படி நடிக்க வேண்டும், இசையமைக்க வேண்டும் என்று பேசவில்லை, தண்ணீர் பிரச்சனை எப்படி சரி செய்யப்படும், வேலையில்லா திண்டாட்டம் எப்படி சரி செய்யப்படும் என்பதைப் பற்றி பேசி வருகின்றேன்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துக்கள், சீக்கியர்கள், மற்றும் புத்த மதத்தினர் தவிர அனைவரையும் நாட்டில் இருந்து வெளியேற்றிவிடுவோம் என்று கூறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன ?
யார் அமித் ஷா? அவரை மக்கள் எப்படி அறிவார்கள் ? ஒரு அடியாளாகத்தான் அறியப்படுகின்றார். அவரை நான் ஒரு தோல்வியடைந்தவராக கூட பார்ப்பதில்லை. மாறாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.