சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "கூட்டணி தொடர்பாக தலைமைக் கழகத்தில் இருந்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரத்தை தொடர்ந்து, கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாக செய்தி வெளியானது. கூட்டணியில் இழுபறியும் இல்லை குழப்பமும் இல்லை.
மூத்த அரசியல் தலைவரான திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்திக்க சென்றது தொடர்பாக சுதீஷ் முன்னிலையில் இருவரும் விளக்கம் அளித்துவிட்டனர். மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு வீட்டிற்கு வந்தவர்களை இப்படித்தான் அவமானப்படுத்துவதா?.
துரைமுருகன் முதலில் அப்போது தெளிவாக இருந்தாரா என்று தெரியவில்லை. அவரது பேச்சிலேயே குழப்பம் உள்ளது. முதலில் தேமுதிகவில் இருந்து சந்திக்க வந்தவர்களை தெரியும் என்கிறார். பிறகு, அவர்கள் யாரென்றே தெரியாது என்கிறார். தெரியாத நபர்களை துரைமுருகன் அவ்வளவு எளிதில் சந்தித்துவிடுவாரா?. இப்படி கீழ்த்தரமான அரசியலை அவர் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.
துரைமுருகனை சந்திப்பதற்காக இருவரும் உள்ளே போகும்போது மீடியாக்கள் அங்கு இல்லை, வெளியே வரும்போது எப்படி வந்தது? எனவே, அரசியல் ரீதியாக தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தில் இதை திமுக கையாண்டிருக்கிறது. சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலம் இதை திமுக பூதாகரமாக்கிவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்தே திமுக என்கிற கட்சிக்கான விளக்கத்தை நான் தெளிவாகி பதிவு செய்து வருகிறேன். திமுக என்றால் ‘தில்லு முல்லு கட்சி’ தான் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி தொடர்பாக எழுப்பப்படும் கேள்வியே தவறு. ஒரு வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். அதேபோல் தான் தேர்தலும். கூட்டணிக்காக கட்சிகள் வரும்.
தேமுதிகவின் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். 2011-க்கு முன்பு விஜயகாந்த் மீது ஜெயலலிதா பல்வேறு அவதூறுகளை தெரிவித்தார். அதற்கு பிறகு தான் 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். அவர் முதல்வரானார், நாங்கள் எதிர்க்கட்சியானோம். எங்களால் தான் ஜெயலலிதா முதல்வரானார். எங்களை மற்றவர்கள் விமர்சிக்கும் போது, அவர்களை நாங்கள் விமர்சிக்கிறோம். அரசியலில் இது சாதாரண விஷயம். அதற்காக, கொள்கையை நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டதாக சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.
கடந்த தேர்தலின் போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அப்போது, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒரு சேர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒருசேர தொகுதி பங்கீடு முடிவானது. ஆனால், இம்முறை எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே பாமகவுடன் அதிமுக அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது தான் எங்களது இந்த தாமதத்திற்கு காரணம்.
மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணி அமைத்தால் தான் தமிழகத்திற்கு ஏதேனும் நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். அதிமுக தனித்துப் போட்டியிட்டுத் தான் 37 எம்.பி.க்களைப் பெற்றது. ஆனால், அவர்களை வைத்துக் கொண்டு அதிமுகவால் என்ன சாதிக்க முடிந்தது?.
இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த முழு விவரத்தையும் பத்திரிக்கையாளர்களிடம் தான் முதலில் தெரிவிப்போம். அதேசமயம், தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தேமுதிக பயப்படவில்லை" என்றார்.
தேமுதிகவின் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, பிரேமலதா பலமுறை பத்திரிக்கையாளர்களை ஒருமுறையில் பேசினார். கட்சித் தலைவர்களையும் ஒருமுறையில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், பிரேமலதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தவிர, பிரேமலதாவின் செய்தியாளர்கள் சந்திப்பு ட்விட்டரில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.