Priyanka Gandhi : காங்கிரஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி. சோனியா காந்தியின் மகள் மற்றும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, இது நாள் வரையில் ராகுல் காந்திக்காகவே பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது முதல் முறையாக நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார் அவர். இன்று காங்கிரஸ் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்த உத்தரவில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டார். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் பொறுப்பாளராக செயல்படுவார் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் தொகுதி உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ரேபரேலி தொகுதியாகும்.
இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் தங்களின் விருப்பத்தினை இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தனர்.
Priyanka Gandhi - காங்கிரஸ் பொதுச் செயலாளர்
இந்நிலையில் இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி செயல்படுவார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா உத்தரப் பிரதேசம் மேற்கு பகுதி பொறுப்பாளராக நியகிக்கப்பட்டார். உ.பி. பொறுப்பாளராக இருந்த பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் ஹரியானா பொறுப்பாளராக செல்கிறார். இதுவரை அசோக் கெலாத் வகித்து வந்த கட்சி பொதுச்செயலாளர் பதவியை தற்போது கே.சி. வேணுகோபால் வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சியினரின் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், 80 தொகுதிகளைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் இந்த இரண்டு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.
சோனியாவின் ரேபரேலி தொகுதி மற்றும் அமேதி ஆகிய இடங்களில் போட்டியிடவில்லை இந்த இரண்டு கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.