அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ப்ரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டதற்குப் பிறகு, முதன்முறையாக இன்று காங்கிரஸ் பேரணியில் அவர் உரையாற்றி இருக்கிறார்.
பிரியங்கா காந்தி இதுவரையில் தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், அம்மா சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், கடந்த ஜனவரி 23ம் தேதி பிரியங்கா காந்திக்கு பொதுச் செயலாளர் பொறுப்பினை அளித்து, உத்திரப் பிரதேசத்தில்(கிழக்கு) பொதுத் தேர்தல் பணிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ப்ரியங்கா காந்தி உரை
இதன் மூலம், நேரடி அரசியலில் களமிறக்கப்பட்ட ப்ரியங்கா காந்தி, இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் முதன் முறையாக உரையாற்றினார்.
அதில், "2014ம் ஆண்டு உங்களுக்கு வாக்குறுதி அளித்தவரிடம், வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் செய்தாச்சா என்று கேளுங்கள். பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றியும் அவர்கள் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேளுங்கள்.
மேலும் பல தேர்தல் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இளைஞர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா, பெண்கள் பாதுகாப்பாக உணருகிறார்களா, விவசாயிகளுக்கு இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது?, இவை தான் தேர்தலின் முக்கிய பிரச்சனைகள்.
இந்த நாடு அன்பு, இணக்கம், மற்றும் சகோதரத்துவத்தின் அஸ்திவாரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும் சோகத்தை ஏற்படுத்துகின்றன. வரும் தேர்தலில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை யோசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யப் போகிறீர்கள். பயனில்லாத பிரச்சனைகள் எழுப்பப்படக் கூடாது" என்று தனது உரையில் தெரிவித்தார்.