உ.பி.யில் தலித் வாக்காளர்களை கவர முயல்கிறாரா ப்ரியங்கா காந்தி?

கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் 41 தொகுதிகளில் பொதுத் தேர்தல் பணிகளை காங்கிரஸிற்காக மேற்கொண்டு வருகிறார் பிரியங்கா காந்தி

Priyanka Gandhi Vadra : உத்திரப் பிரதேசம் மாநிலம், மீரட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத். தலித் இன தலைவராக, ராவண் என்ற பெயரில் அறியப்பட்டவர். இந்த வருடம் நடைபெறும் பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

Priyanka Gandhi Vadra met Bhim Army Chief

30 வயது மிக்க அந்த இளைஞர் ஒரு வழக்கறிஞர் ஆவார். வாக்கு சேகரிப்பதற்காக மோட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி, உத்திரப் பிரதேச காவல்த்துறை அவரை கைது செய்தது.

பீம் ஆர்மியின் தலைவராக இருக்கும் அவரை கைது செய்து காவல்துறை கண்காணிப்பில் வைத்த போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை சந்திப்பதற்காக முதலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரியங்கா காந்தி முயற்சி செய்தார். ஆனால் முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் 15 நிமிடங்கள் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

”நான் இங்கு இளம் தலைவரை சந்தித்து அவருடைய உடல்நலனை விசாரிக்க வந்தேன். அவர் பேச விரும்புகின்றார். ஆனால் அவரின் குரலை மாநில அரசு ஒடுக்க விரும்புகிறது. அவரை கைது செய்திருக்க கூடாது. அவரை பேச மாநில அரசு அனுமதித்திருக்க வேண்டும். அவருக்கு ஆதரவு அளிக்கவே நான் இங்கு வந்தேன்” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

தற்போது கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் 41 தொகுதிகளில் பொதுத் தேர்தல் பணிகளை காங்கிரஸிற்காக மேற்கொண்டு வருகிறார் பிரியங்கா காந்தி. அம்மாநிலத்தில் 30% தலித் மக்கள் உள்ளனர். எனவே இந்த சந்திப்பு சிறப்புமிக்கதாக பலராலும் பார்க்கப்படுகிறது.

தலித் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பெரும் முயற்சி எடுத்து வருகின்ற நிலையில் பிரியங்கா காந்தியின் இம்முயற்சி ஒரு தெளிவான செய்தியை மாயாவதிக்கு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாவதி – அகிலேஷ் யாதவ் கூட்டணி சார்பில், வாரணாசியில் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால் நிச்சயம் நான் நிற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் சந்திரசேகர ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அறிவிப்பின் போது, நிச்சயம் அகிலேஷ் மற்றும் மாயாவதி கூட்டணி எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க : ‘பெண்கள் பாதுகாப்பு என்னாச்சு பிரதமரே?’ – முதல் அரசியல் பேரணியில் ப்ரியங்கா காந்தி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close