Rajasthan Governor Kalyan Singh violated MCC : ராஜஸ்தான் ஆளுநர் கல்யான் சிங், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை கண்டறிந்த தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் பார்வைக்கு பிரச்ச்னையை கொண்டு சென்றுள்ளது. மேலும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.
1990க்குப் பிறகு விதிமுறைகளை மீறும் ஒரு ஆளுநர்
இது போன்று 1990ல் ஒரு முறை ஆளுநர் தேர்தல் நடத்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி புகார் அளித்தது தேர்தல் ஆணையம். ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக பணியில் இருந்தவர் குல்ஷெர் அஹ்மத்.
மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் தன் மகன் சயீத் அஹ்மதிற்கு ஆதரவாக பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளீர்கள் என்று தேர்தல் ஆணையம் கூற, தன்னுடைய பதவியை அன்று ராஜினாமா செய்தார் குல்ஷெர்.
மார்ச் 23ம் தேதி ஆலிகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் ராஜஸ்தான் ஆளுநர். அப்போது “மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அது தான் தற்போது நாட்டுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று” என்று கூறியுள்ளார்
மேலும் அவர் “நாங்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள். நாங்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார். இது புகாராக ஏற்றுக் கொண்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது தேர்தல் ஆணையம்.