Rajinikanth Confirms His political entry in assembly general election: ரஜினிகாந்த் தனது அரசியல் நிலையை இன்று மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என்றும், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து, ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டார். ‘சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு’ என அப்போதே அவர் குறிப்பிட்டார்.
எனினும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் களம் இறங்காததால், அவரது அரசியல் குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் தனது நிலையை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘எடுத்த முடிவில் பின் வாங்க மாட்டேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். அறிவித்தபடி, சட்டமன்றப் பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’ என கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
இன்று மேலும் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘மோடி பிரதமர் ஆவாரா? என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்’ என்றார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘எலக்ஷன்தான் முடிஞ்சுட்டுல்ல’ என்றார் முதலில். பிறகு, ‘அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என ட்விட்டரில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், ‘அவங்க ஆர்வம் எனக்குப் புரிகிறது. அவங்களை ஏமாற்ற மாட்டேன். எப்ப சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்தாலும் சந்திப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.