விஜயகாந்தை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்தார். அப்போது, ‘இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது. விஜயகாந்த் நல்ல மனிதர். அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்றார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 22) தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எனினும் ரஜினிகாந்தின் சந்திப்பு, உடல் நலம் விசாரிக்கும் நிகழ்வாகவே இருந்தது.
விஜயகாந்துடன் நடந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:
‘நான் அமெரிக்காவில் இருக்கும்போதே சந்திக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது முதலில் நலம் விசாரிக்க வந்தவர் கேப்டன் தான். நான் சிங்கப்பூரில் இருந்தபோதும் போனில் முதலில் நலம் விசாரித்து, ‘உடம்ப பார்த்துக்கோங்க’ன்னு சொன்னவர் அவர்தான்.
அவர் இப்போ அமெரிக்காவுக்கு போயிட்டு நல்ல உடல் நலத்துடன் வந்திருக்கிறார். அவரை பார்க்க சந்தோஷமா இருக்கு. நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது. எனது அரசியல் நிலை பற்றி நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அது பற்றி இப்போ சொல்ல எதுவும் கிடையாது.’ என்றார் ரஜினிகாந்த்.