எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாபெரும் ஆயுதம் ஒன்றை பாஜகவுக்கு எதிராக வீசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
சமீபத்தில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்தப் பணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் அளவுக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, மூன்று தவணைகளில் தலா 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2000 ரூபாய் வழங்கும் தொகை மிகவும் குறைவானது. இது ஏழைகளுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது எனக் கூறி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என இன்று அறிவித்து அதிரடி கிளப்பி உள்ளார்.
மேலும் படிக்க - வறுமையை ஒழிக்க இறுதி ஆயுதம்... ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி - ராகுல் காந்தி
'காங்கிரஸ் கட்சியை இந்தியர்கள் தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால், ஆண்டிற்கு ரூபாய் 72,000-ஐ ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்படும்' என்று அறிக்கை ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த செயல் திட்டத்தினால் இந்தியாவில் 5 கோடி குடும்பங்களில் வாழும் சுமார் 25 கோடி மக்கள் பயனடைவர் என்றும், உலகில் வேறெந்த பகுதியிலும் இப்படி ஒரு மகத்தான திட்டம் அறிவிக்கப்படவில்லை' என்று ராகுல் கூறியுள்ளார்.
ராகுலின் இந்த அறிவிப்புக்கு கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.
பாஜக தலைவர் ராம் மாதவ் கூறுகையில், "அவர் நிலவைக் கூட பெற்றுத் தருவேன் என்று வாக்களிப்பார். இதையெல்லாம் யார் கண்டுக் கொள்ளப் போகிறார்கள்? ஏற்கனவே, எழைகளுக்கென பல்வேறு நலத் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளது. தோல்வி உறுதி என்பதை உணர்ந்து, இவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
இவ்வாறாக, சமூக தளங்களில் ராகுல் அறிவிப்பு குறித்தும், நடைமுறையில் அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்தும் அனல் பறக்க விவாதம் நடைபெற்று வருகிறது.