திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் எங்கே நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அதற்கு மாறாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவிட்டு சீமான் ஏன் திருவொற்றியூர் தொகுதியை போட்டியிட தேர்வு செய்தார்? அதற்கு காரணம் என்ன என்று கேள்விகள் எழுந்துள்ளன.
மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் ஏன் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தால் திருவொற்றியூர் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனை எதிர்ப்பதற்காக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார்.
ஆனால், காட்டுப்பள்ளி துறைமுகம் திருவொற்றியூர் தொகுதிக்குள் வரவில்லை பொன்னேரி தொகுதிக்குள் வருகிறது. அங்கே போட்டியிடாமல் ஏன் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்? அதற்கு காரணம் திருவொற்றியூர் தொகுதி தொகுதியில் கணிசமாக நாடார் வாக்குகள் இருப்பதுதான் காரணம் என்று சமூக ஊடகங்களில் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு சமூக ஊடங்களில் பதிலளித்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள், பொன்னேரி தனி தொகுதி அங்கே சீமான் போட்டியிட முடியாது. அதே நேரத்தில், காட்டுப்பள்ளி பொன்னேரி தொகுதிக்குள் வந்தாலும் அதனால், திருவொற்றியூர் தொகுதி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். திருவொற்றியூர் தொகுதி பொதுத் தொகுதி ஆகையால்தான் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று பதிலளித்தனர். ஆனால், இதையெல்லாம் தாண்டி, சீமான் திருவொற்றியூர் தொகுடியில் போட்டியிடுவதற்கு, கடந்த மக்களவைத் தேர்தலின்போது வட சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் தொகுதியில் காளியம்மாள் 60515 வாக்குகள் பெற்றார். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 6.33% வாகுக்களைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளில் ஒன்றாக வட சென்னை தொகுதி இருந்தது.
இந்த வட சென்னை மக்களவைத் தொகுதியில்தான், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), ராயபுரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
திருவொற்றியூர் தொகுதியில் மீனவர்கள், தலித்துகள், வன்னியர்கள் என வாக்காளர்களாக பெரும்பங்கு வகிக்கின்றனர். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வட சென்னை தொகுதியில் குறிப்பாக திருவொற்றியூர் பகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இதுதான் சீமான் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் என்று நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொளத்தூர் தொகுதியில் கணிசமாக தமிழ் பேசும் தெலுங்கு மக்களின் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் தீவிர தமிழ்த் தேசியம் பேசும் சீமானுக்கு எதிராக மாறும் வாய்புகள் உள்ளது. இந்த காரணத்தாலும், சீமான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாததற்கு முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.