Sivagangai Lok sabha constituency : தமிழகம் மற்றும் புதுவையின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி 2ம் கட்டமாக ஒரே நாளில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா களம் இறங்குகிறார். பாஜக வேட்பாளருக்கு எதிராக மீண்டும், இரண்டாவது முறையாக காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சிநேகன் போட்டியிடுகிறார்
தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தில் இரண்டே இடங்களில் தான் நேரடியாக மோதுகின்றார்கள். அதனால் சிவகங்கை தொகுதி இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்று சிவகங்கை தொகுதியைப் பற்றி ஒரு முன்னோட்டம் உங்களுக்காக !
திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை தொகுதி. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது.
இத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 77-80 காலகட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த பெரியசாமி தியாகராஜன் என்பவரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்று சொன்னாலும் மிகையாகாது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மா.சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ்.
பின்பு காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். திமுக சார்பில் சுப.துரைராஜூம், அதிமுக சார்பில் செந்தில்நாதனும், பாஜக சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அதிமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இம்முறை கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற இழுபறி தொடர்ந்து நீடித்துவந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி என இந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ்.
மேலும் படிக்க : சிவகங்கை தொகுதி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.