DMK stalin meets governer for to right rule | Indian Express Tamil

ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது

DMK stalin meets governer for right to rule: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினர். பின்னர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஸ்டாலின் ஆளுநரிடம் கோரினார்.

ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் வென்று திமுக வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.

அதேநேரம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் திமுகவுக்கு மொத்தம் 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் திமுகவின் 125 எம்.எல்.ஏக்களோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போது அரங்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சராகப்போகும் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்ததும், மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களின் கடிதத்தோடு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.

அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினர். பின்னர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஸ்டாலின் ஆளுநரிடம் கோரினார். இதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக ஆளுநர் ஸ்டாலினிடம் கூறினார். பின்னர் அங்கு ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் ஆளுநர் தேனீர் விருந்தளித்தார்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மே 7ஆம் தேதி அன்று முதல் அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையிலே எளிமையாக பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதனையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், இன்று மதியம் ஆளுநரின் தனிச்செயலாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் ஸ்டாலின் உடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்குச் சென்று பணிகளை துவங்குவார். அப்போது ஸ்டாலின் முதல்வராக முதலில் எந்த திட்டத்தில் கையெழுத்திடுவார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Stalin meets governer for right to rule