தமிழகத்தின் 16 -வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.
டெபாசிட் இழந்த பிரேமலதா :
கூட்டணிக் குளறுபடிகளுக்கு மத்தியில், அமமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக சார்பில், விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் போதிய சீட் வழங்கப்படாததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் பிரேமலதா. அதன் பிறகு, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்ந்து இழிபறியில் இருந்து வந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியை ஏற்றார், பிரேமலதா விஜயகாந்த்.
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பிரேமலதா உள்பட பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் என, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விருதாச்சலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், 1,94,723 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையில், தொடர்ந்து பின்னடைவை சந்தித்த பிரேமலாதா, 25,908 வாக்குகளை பெற்று, டெபாசிட் இழந்துள்ளார். அவர் விருதாச்சலம் தொகுதியில் பெற்ற வாக்கு சதவீதம் 13.17 ஆகும்.
தேர்தல் பிரசாரங்களின் போது, கூட்டணி அதிருப்தி காரனமாக, தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என சவால் விடுத்திருந்தார் பிரேமலதா. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த வெற்றி பெற்ற விருதாச்சலம் தொகுதியில், பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்திருப்பது தேமுதிக வின் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விருதாச்சலம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 77,064 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், ராதாகிருஷ்ணனை விட, 862 என்ற சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போராடி தோற்ற டிடிவி தினகரன் :
அதிமுக எதிர்ப்பின் மூலம் உருவாகிய கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அந்த கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் சுயேச்சையாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அதன் பின்னர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி உருவானது.
தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுவதால், அத்தொகுதியில் அதிமுக – அமமுக என்ற இருமுனை போட்டியே நிகழும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்டார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் டிடிவி தினகரன் முன்னிலை என செய்திகள் வரத் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலை மாறியது. தொடர்ந்து முன்னிலை நிலவரங்கள் இழுபறியிலேயே இருந்து வந்தது. அடுத்ததடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றார். இறுதியில், அவர் 68556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தினகரன் 56153 வாக்குகளைப் பெற்று, சுமார் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார். அமமுக சார்பில், தினகரன் நிச்சயம் கோவில்பட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் இந்த தோல்வி, அமமுக வின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil