தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்ற நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நட்சத்திர வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, காரைக்குடியில் போட்டியிட்ட ஹெச். ராஜா, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற அவருக்கு, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கிடைத்த 20 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. முக ஸ்டாலின் தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்கிய ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் குஷ்பு. அவரை எதிர்த்து எழிலன் போட்டியிட்டார். ஆரம்பம் முதலே எழிலன் அந்த தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். 2 மண் நிலவரப்படி திமுக வேட்பாளர் நா. எழிலன் 10790 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜகவின் குஷ்பு 5487 வாக்குகளை பெற்றிருந்தார்.
ஹெச்.ராஜா
காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக போட்டியிட்டுக் கொள்ளும் தொகுதிகளில் காரைக்குடியும் ஒன்று. அங்கே பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை எதிர்த்து எஸ். மாங்குடி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்2 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 27,208 வாக்குகளை பெற்றிருந்தார். ஹெச். ராஜா, 11,428 வாக்குகள் பின் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது..
டி.டி.வி. தினகரன்
கோவில்பட்டி தொகுதியில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிட்டார். கடம்பூர் ராஜூ 32197 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். டி.டி.வி. தினகரன் அவரைவிட 5549 வாக்குகள் பின் தங்கிய நிலையில் 26648 வாக்குகளை பெற்றுள்ளார். சி.பி.எம். சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் 12505 வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து வெளியாகிவரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டி.டி.வி. தினகரனுக்கு சாதகமாக அமையவில்லை.
ஸ்ரீப்ரியா
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான ஸ்ரீப்ரியா. மயிலாப்பூர் தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. திமுகவை சேர்ந்த த. வேலு, அதிமுகவை சேர்ந்த நட்ராஜ் ஆகியோரை எதிர்த்து களம் இறங்கிய அவர் இன்று காலை முதல் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil