தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் கலைகட்ட தொடங்கியுள்ளன. மேலும் கூட்டணி கட்சிகள் தங்களது தலைமையிடம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியிலும் சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளனர். இதில் காங்கிரஸ் திமுக கூட்டணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு பாஜக – அதிமுக கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இதே கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடர்கிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, மற்றும் தேமுதிக கட்சிகளின் நிலை என்ன என்பது தற்போது யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக சட்டமன்ற தேர்தல் வரும் முன்னரே வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டத்தை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 31-ந் தேதி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்றும்வரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியில் தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால் நாங்கள் கேட்ட இடஒதுக்கீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்ததாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணி குறித்து பேச சென்ற அதிமுக அமைச்சர்கள் சென்னை திரும்பிய நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக பிப்ரவரி 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அமைச்சர் தங்கமணி வீட்டில் பாமக தலைவர் ஜி,கே.மணி உட்பட கட்சி நிர்வாகிகள் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தற்போது இடஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட முடியாது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து தேர்தல் முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என்று அதிமுக அரசு கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமாக அல்லது வெளியேறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பாமகவும் இடம்பெற்றது. இதனால் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுமுனையில் அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த தேமுதிக தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா என்ற பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் யாரும் இதுவரை தேமுதிக நிர்வாகிகளை சந்திக்க வில்லை என்பதால்தான். இது குறித்து பல முறை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இதுனால் தேமுதிக –வை அதிமுக கழற்றிவிட்டுவிட்டதாக என்ற சந்தேகம் தோன்றியது.
மேலும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தேமுதிக கொடிநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெகுநாட்களுக்கு பிறகு கட்சி தொண்டர்கள் முன்னிலையில், பேசினார். மேலும் இந்த கொடிநாளில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், கூட்டணி குறித்து விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். கட்சி தலைமையின் முடிவுக்கு தொண்டர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் விரைவில்கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும், பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழச்சியில் கூட்டணி கட்சியாக தேமுதிக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டணியில், பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளையும் அதிமுக அதிகமாக கண்டுகொள்ளாது ஏன் என்பது குறித்து பலகட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தொகுதி பங்கீடு. மேலும் இந்த இரு கட்சிகளும் வேறு கூட்டணிக்கு செல்வது தற்போது சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால் இந்த இரு கட்சிகளும், அதிமுக கூட்டணியைவிட்டு வேறு கூட்டணிக்கு செல்வதாக முடிவெடுத்தாலும், தற்போது எந்த கூட்டணிக்கும் செல்லக்கூடிய அளவில் சூழ்நிலை இல்லை. இதில் திமுக கூட்டணியில் ஏற்கனவே கூட்டணி கட்சிகள் நிறம்பி வழிகிறது.
தற்போது இந்த இரு கட்சிகளும் அந்த கூட்டணிக்கு சென்றாலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது கடினம். திமுக கூட்டணியில், ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து பெரும் சலசலப்பு நிலவி வருவதால், கலைஞர் கருணாநிதி செல்வது போல இப்போது தொகுதியில் இடமில்லை இதயத்தில் மட்டுமே இடம் என்பது போல தேர்தல் பணிகளை மட்டுமே செய்ய முடியும். போட்டியிடும் வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனாலும் அமமுக தலைமையில் 3-வது அணி அமைக்க முயற்சி செய்தாலும், தினகரனை நம்பி களமிறங்க எந்த கட்சியும் தயாராக இல்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்றாலும், கமல்ஹாசன் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளும் விரும்பத்தகாத ஒன்று. மேலும் கமல்ஹாசன் திரைத்துறையில் சீனியராக இருக்கலாம். ஆனால் அரசியலில் நாங்கள் தான் சீனியர் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இனால் மக்கள் மய்யம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இல்லை.
இந்த இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. மேலும் கடந்த 2016-ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்த பாமக படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்த இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அதிமுக இவர்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.