குறைந்த தொகுதிகளை ஏற்க வைகோ தயார்: மற்றக் கட்சிகள்?

Vaiko Say About Assembly Election : திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko Say About Assembly Election : தமிழகத்தில் வரும் ஏப்ரல் கடைசி  வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் முழுசாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.  இதில் திமுக  தலைவர் ஸ்டாலின் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழகம் முழுவதும் அதிமுகவை நிராகரிப்போம், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக சார்பில் முதல்வர் பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம் என்ற பெயரில், தமிழகத்தை சீரமைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழக தேர்தலில், அதிகமான கூட்டணி கட்சிகளை வைத்துள்ள திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எப்போதுமே  குழப்பங்கள் நீடித்து வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த குழப்படங்கள் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில், தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் திமுக விட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த அறிவிப்பினால், திமுக கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியி நிர்பந்திப்பதாகவும், அதனால்தான் இவர்கள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் யாரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியி்ட நிர்பந்திக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கட்சியில் ஏற்பட்ட சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.

இந்நிலையில், தற்போது  திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் குறைந்த இடங்களே கிடைக்கும் தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ கூறுகையில், தி.மு.க கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைக்கும். அதைப் பற்றி ம.தி.மு.க-வினர் கவலைப்பட வேண்டாம். யார் எது சொன்னாலும் கண்டுகொள்ள வேண்டாம். இந்தத் தேர்தலில் வேறு வழியில்லை. ம.தி.மு.க-வினர் பொறுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு கட்சி பொதுக்குழு கூட்டி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தலைமையின் முடிவுக்கு தொண்டர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடாளுமனற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த மதிமுக, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது கிடையாது. 2001 மற்றும் 2006-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. இதில் 2001-ம் ஆண்டு தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்த மதிமுக 2006 ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. இதில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக, பாஜக தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது. அதனைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த மதிமுகவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட தொகுதிப்பங்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக அந்த கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் தற்போது தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துள்ள மதிமுக, திமுகவில் குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ கூறியிறுப்பது அக்கட்சினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் வைகோவின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணி கட்சிகளிடமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியான மதிமுக குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் நிலை குறித்து அக்கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், திமுக 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 54 தொகுதிகள் மட்டுமே இருக்கும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிககள் ஒதுக்கப்பட்டால் மீதம் 29 தொகுதிகள் மட்டுமே இருக்கும். இதில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்செஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி என மீதமுள்ள 7 கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இதில் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ் மார்க்செஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு 3 கட்சிகளிடையே பெரும் போட்டி ஏற்படும். இதில் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட எதிர்பார்க்கும். இதனால் ஒற்றை இலக்க தொகுதிகளை கொடுக்கும்போது அதனை ஏற்க விடுதலை சிறுத்தைகள் அதனை ஏற்க மறுத்துவிட வாய்ப்புள்ளது.

மேலும் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்செஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுக்கும் தொகுதிபங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் தற்போது திமுக கூட்டணியில் அதே நிலை நீடிப்பதால், கம்யூசிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறுமா? அல்லது இதே கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இந்த அறிவிப்பு கூட்டணி கட்சிகளிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஏன் இப்படி கூறினார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவரின் உடல்நிலை முன்புபோல் இல்லை என்பதால்தான் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் திமுக கூட்டணியில் அடுத்த சில நாட்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil election news vaico say about dmk coalition parties

Next Story
உதயநிதியை எதிர்த்து குஷ்பூ போட்டி? பாஜக மேலிட தலைவர் டிவிஸ்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com