நாடாளுமன்றத் தேர்தலால் இந்திய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இது ரெட்டை திருவிழாவாக இருக்கப் போகிறது. ஆம்! மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதியை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதனுடன் டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பதவியிழந்ததால் காலியான இடங்கள் உள்பட 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த 21 தொகுதி இடைத்தேர்தலை வரவிடாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து புகார் கூறி வந்தார்.
21 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாதபட்சத்தில் தமிழக ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதியே 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு விளக்கம் அளித்தார்.
18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் இரட்டைத் தேர்தல் திருவிழாவாக அமைகிறது.தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையாக 18 தொகுதி இடைத்தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை தக்க வைக்கவேண்டும் என்றால், 18 தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றாக வேண்டும்.
'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். இலவச திட்டங்கள் வழங்க அனுமதி இல்லை; வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும்' என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.