Tamil Nadu 4 assembly constituency bypolls 2019 : அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே மாதம் 2ம் தேதி வாபஸ் பெற இறுதி நாளாகும். வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்.
மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா மற்றும் கோவாவில் காலியாக இருக்கும் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்ற 18 எம்.எல்.ஏக்கள் செல்ல, அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகள் உட்பட 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று பலத்தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்ட நிலையில், 18 சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக பெரும்பான்மை பெரும் எனில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு 66 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிருப்தி கடிதம் !