அண்ணாமலை ஐபிஎஸ், குஷ்பூ ஆகியோர் மூலமாக திமுக.வின் முக்கிய பிரசாரகர்களான ஸ்டாலினையும், உதயநிதியையும் முடக்கிப் போடும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. இந்தத் திட்டத்தின்படி கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையும், சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து குஷ்புவும் களம் இறங்க இருக்கிறார்கள். ஒருவேளை உதயநிதி ஆயிரம்விளக்கு தொகுதிக்கு சென்றால், அங்கு காயத்ரி ரகுராமை போட்டியிட வைக்க தயாராகிறது பாஜக.
எதிரணி விஐபி-க்கு எதிராக ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவது பாஜக எப்போதும் வீசும் ஒரு ஆயுதம்தான். சோனியா அரசியலில் ‘என்ட்ரி’ ஆகி, 1999-ல் உ.பி மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது பெல்லாரியில் சோனியாவை எதிர்த்து பாஜக.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் நிறுத்தப்பட்டார். ‘வெளிநாட்டுக் காரர்’ என்கிற முழக்கத்துடன் சோனியாவுக்கு எதிராக பெல்லாரியில் சுற்றிச் சுழன்றார் சுஷ்மா.
பெல்லாரியில் எதிர்பார்த்தது போலவே சுஷ்மா தோற்றார். ஆனால் அவரது பிரசாரம், சோனியாவை வடமாநிலங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு முடக்கியது. அந்தத் தேர்தலில் வாஜ்பாய் பிரதமர் ஆனார். பெல்லாரியில் தோற்ற சுஷ்மா, மத்திய அமைச்சர் பொறுப்பில் இணைந்தார்.
2014 தேர்தலில் இதேபோல அமேதியில் ராகுல் காந்திக்கு ‘செக்’ வைக்க ஸ்மிரிதி இரானியை இறக்கியது பாஜக. ஸ்மிரிதி தோற்றார். ஆனால் ராகுலை பெருமளவில் அவரால் டேமேஜ் செய்ய முடிந்தது. அமேதியில் தோற்றாலும், மோடியின் முதல் அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஸ்மிரிதி. 2019-ல் மீண்டும் அதே அமேதியில் நின்று ராகுலை தோற்கடிக்கவும் செய்திருக்கிறார் ஸ்மிரிதி.
இதே வியூகத்தை தமிழக தேர்தல் களத்தில் பரீட்சித்துப் பார்க்க தயாராகிறது பாஜக. தமிழகத்தில் கொள்கை அளவிலும், அரசியல் ரீதியாகவும் திமுக.வுக்கு எதிராக களமாடுவதுதான் பாஜக.வின் நிலைப்பாடு. அந்த வகையில் திமுக.வின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலினையும், இளைஞரணிச் செயலாளரான உதயநிதியையும் குறி வைக்கிறது பாஜக.
ஸ்டாலின் 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் தொடர்ந்து கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் வலுவான அதிமுக கூட்டணி மற்றும் வலுவான எதிர் வேட்பாளர் (சைதை துரைசாமி) ஆகியவற்றை மீறி சுமார் 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் ஸ்டாலின்.
2016-ல் மீண்டும் இதே தொகுதியில் நின்ற ஸ்டாலின், அதிமுக.வின் ஜேசிடி பிரபாகரை சுமார் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் ‘டச்’ வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், மீண்டும் அங்கேயே நிற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியின் முக்கிய பிரசாரகர் ஸ்டாலின்தான். அவருக்கு எதிராக நட்சத்திர வேட்பாளரை களம் இறக்குவதன் மூலமாக ஸ்டாலின் கவனத்தை கொளத்தூரில் முடக்குவதுதான் பாஜக திட்டம்! இதற்காகவே பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையை அங்கு களமிறக்க தயாராகிறது பாஜக.
அண்ணாமலைக்கு மாஜி ஐபிஎஸ் அதிகாரி என்ற முறையில் ஒரு கிரேஸ் இருக்கிறது. தற்சார்பு விவசாயப் பணிகள் மூலமாகவும், சமூக வலைதள ஒருங்கிணைப்பு மூலமாகவும் தனது தொடர்புகளை வலுவாக்கி வைத்திருக்கிறார் அவர். எனவே அவரது மூலமாக திமுக.வின் வாரிசு அரசியல், கடந்தகால ஊழல்கள் ஆகியவற்றை பிரசாரம் செய்கையில், அது வாக்காளர்களிடம் அதிக தாக்கத்தை உருவாக்கும் என கணிக்கிறது பாஜக. தவிர, திமுக முக்கியத் தலைவருக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுப்பதன் மூலமாக மாநிலம் முழுவதும் திமுக எதிர்ப்பாளர்களின் வாக்குகளை முழுமையாக தங்கள் அணியை நோக்கி திருப்ப முடியும் என்கிற கணக்கும் இருக்கிறதாம்.
திமுக.வின் மற்றொரு முக்கிய பிரசாரகரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் களம் இறங்கக் கூடும். இந்தத் தொகுதியும் பாரம்பரியமாக திமுக.வுக்கு சாதகமான தொகுதிதான். கலைஞர் கருணாநிதி இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். கடந்த தேர்தலில் இங்கு ஜெயித்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பலியானதால், தற்போது இங்கு எம்.எல்.ஏ பதவி காலியாக இருக்கிறது. எனவே உதயநிதி இந்தத் தொகுதி மீதே குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது.
உதயநிதி இங்கு நிற்பார் என்பதை எதிர்பார்த்தே, பாஜக சார்பில் இங்கு நடிகை குஷ்புவை தொகுதி பொறுப்பாளராக அறிவித்து தேர்தல் பணியை முடுக்கி விட்டிருக்கிறார்கள். குஷ்புவும் வாரத்திற்கு சில நாட்கள் இங்கு முகாமிட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் இங்கு நடந்த ஒரு நிகழ்வில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ‘குஷ்புவுக்கு நீங்கள் வாக்களிக்கத் தயாரா?’ எனக் கேட்டு, வெளிப்படையாக குஷ்புவை வேட்பாளராகவே அறிவித்துவிட்டார். எனவே இங்கு உதயநிதி- குஷ்பு ‘ஃபைட்’டுக்கு வாய்ப்பு அதிகம்!
இதற்கிடையே ஸ்டாலின் முன்பு ஜெயித்த ஆயிரம் விளக்கு தொகுதி மீதும் உதயநிதிக்கு ஒரு கண் இருக்கிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் ஜெயித்த கு.க.செல்வம் தற்போது பாஜக.வில் இருக்கிறார். அவரே மீண்டும் இங்கு போட்டியிட விரும்பக்கூடும். எனினும் உதயநிதி இங்கு நிற்கும்பட்சத்தில் ஸ்டார் வேட்பாளராக பாஜக கலை இலக்கியப் பிரிவு தலைவரான நடிகை காயத்ரி ரகுராமை களம் இறக்க நினைக்கிறது பாஜக. இந்த மோதலுக்கு முன்னோட்டமாக இப்போதே உதயநிதிக்கு எதிராக காரசாரமாக ட்வீட்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி.
அதிமுக.வைப் பொறுத்தவரை கொளத்தூர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய 3 தொகுதிகளையுமே பாஜக வசம் தள்ளிவிட தயாராக இருப்பதாகவே தெரிகிறது. எனவே பாஜக இந்த செயல் திட்டத்தில் மும்முரமாக களம் இறங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.