Tamil Nadu Assembly election 2021 tamil news: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிட உள்ள, பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 'நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார் அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தன்னிடம் ரூ. 4.73 கோடி மதிப்புள்ள 11.200 கி.கி தங்க நகை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.12,61,19,403 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.11,50,000 எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரி நாடாரின் அசையும் சொத்துக்களில் அவர் வைத்துள்ள பார்ச்சூனர், இனோவா கிறிஸ்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி, டாடா சஃபாரி மற்றும் பொலிரோ போன்ற கார்களும் உள்ளடங்கும். இவை தவிர அவர் மீது 15 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அவருடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், பெரும்பாண்மையான வாக்குகளை பெற்று 3ம் இடத்தில் இருந்தார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்கு சிறுவயது முதலே தங்க ஆபரணங்கள் மீது கொள்ளைப் பிரியம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ட்ராவல்ஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்பட பைனான்ஸ் போன்ற தொழில்கள் மூலம், தான் ஈட்டிய வருவாயில் அந்த நககைகள் வாங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு சந்தையில் புதிய மாடல் நககைகள் வந்தால் அதை உடனடியாக தான் வாங்குவேன் என்றும் கூறியுள்ளார்.
ஹரி நாடார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil