Tamil Nadu Assembly Election Live Updates : அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன், கமல்ஹாசன் மக்களுக்கு என்ன சேவை செய்தார் என்றும் அவர் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார் என்றும் உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே சேவை செய்து வந்தவர் என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஆ.ராசா, முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஆ. ராசா. இந்நிலையில் தற்போது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடைய பேச்சு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பானவை என்றும் இன்று மாலை 6 மணிக்குள் அதற்கான விளக்கத்தை அளிக்கும்படியும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் ஆ. ராசாவை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பிரான்சிலிருந்து, மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வரவுள்ளன. 2022-ம் ஆண்டுக்குள் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தமாகியிருக்கிறது. ஏற்கெனவே 11 விமானங்கள் இந்தியா வந்த நிலையில், இன்று மேலும் 3 விமானங்கள் வருகின்றன.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:34 (IST) 31 Mar 2021ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக, ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2021 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு ஜூன் 30 வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
- 19:18 (IST) 31 Mar 2021சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
சிலிண்டர் விலை ரூ.10 குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
- 18:43 (IST) 31 Mar 2021தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணி கட்சியினருடன் முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். தேர்தலில் வென்று வெற்றி மாலையை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்பிப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
- 18:08 (IST) 31 Mar 2021அரசியல் எனக்கு தொழில் அல்ல என் கடமை - கமல்ஹாசன்
செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நான் 1947 முன்பு இருந்த அரசியல்வாதியின் மகன். அப்போதைய அரசியல் மக்கள் சம்பந்தப்பட்டது. அரசியல் எனக்கு தொழில் அல்ல என் கடமை” என்று கூறினார்.
- 17:42 (IST) 31 Mar 2021கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை - யோகி ஆதித்யநாத் விமர்சனம்
விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை” என்று கூறினார்.
- 17:40 (IST) 31 Mar 2021தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா - ராஜ்நாத் சிங் பிரசாரம்
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரம் செய்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தை முன்னேற்றுவதில் உறுதியாக உள்ளது” என்று கூறினார்.
- 17:21 (IST) 31 Mar 2021சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்
ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
- 17:18 (IST) 31 Mar 2021தேனியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா
தேனியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 16:29 (IST) 31 Mar 2021"நந்திகிராம் தொகுதியில் தோற்றுவிடுவோம் என மம்தா பயப்படுகிறார்"-ஜே.பி.நட்டா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் தோற்கப்போவதால், அவர் பயத்தில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்
- 16:26 (IST) 31 Mar 2021கிருஷ்ணகிரியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம்!
எதிரவரும் சட்டமன்ற தேர்தலுக்காக கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா' என்று தெரிவித்துள்ளார்.
- 16:06 (IST) 31 Mar 2021"கடைசி நாளில் இரவு 7 மணி வரை பிரசாரம்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வருகிற 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 4ஆம் தேதி இரவு 7 மணி வரை, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு செய்யப்படும் நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
- 15:45 (IST) 31 Mar 2021ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் பான் - ஆதார் இணைப்பு...!
if the site is in this condition how can we link this pan and aadhar ....eventhogh today is the last date....pancard aadharcard pic.twitter.com/7dUTraMFyt
— kadayan (@ashik_baby17) March 31, 2021pancardpancard@IncomeTaxIndia as always your website is down. How are we supposed to updated pan and Adhar if website is down.?? pic.twitter.com/fdKHC09eTH
— nitika (@Nitika192) March 31, 2021pancard aadharcard pic.twitter.com/7dUTraMFyt
— kadayan (@ashik_baby17) March 31, 2021
பான் - ஆதார் இணைப்புக்கான காலக்கெடு இன்று முடிவடைகிற நிலையில், பான் - ஆதார் எண் இணைக்கும் இணையப்பக்கம் இயங்கவில்லை. எனவே இந்த விவகாரம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
- 15:37 (IST) 31 Mar 2021"நாற்புறமும் நாராசமாய் பண்பற்ற வார்த்தைகள்; யாகாவாராயினும் நாகாப்போம்" : கமல்ஹாசன் ட்வீட்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் களத்தில் உள்ளனர். ஆனால் பாஜகவின் வானதிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் கமலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாஜகவின் பேச்சாளரும் நடிகருமான ராதாரவி அண்மையில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பரப்புரையில் பேசிய வானதி சீனிவாசன் “என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கிறார் கமல். அவரைப் பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துவருகிறீர்கள். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ட்விட்டர் வழியாக பதில் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், யாகாவாராயினும் நாகாப்போம் என்றுள்ளார். மேலும் "வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
- 15:29 (IST) 31 Mar 2021பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் பக்கமே உள்ளது - யோகி ஆதித்யநாத்
கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தமிழகத்திலிருந்து ரூ.120 நிதி வந்துள்ளது என்றும், பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் பக்கமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
- 14:26 (IST) 31 Mar 2021அமைச்சர் ஜெய்சங்கரின் தாஜிகிஸ்தான் பயணம்
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாஜிகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கலோனல் ஜென்ரல் ஷெராலி மிர்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். துஷான்பேயில் நேற்று ஆசியாவின் அமைச்சர்கள் நிலை மாநாட்டிற்கு இடையே இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது
- 14:06 (IST) 31 Mar 2021கண்ணியம் குறைவாக பேசவில்லை - ஆ. ராசா
எந்த விதமான கண்ணியக்குறைவான பேச்சையும் நான் முதல்வருக்கு எதிராக, தாய்மையை அவமதிக்கும் வகையில் பேசவில்லை ; தமிழில் உவமானம் என ஒன்று உள்ளது, அதையே பயன்படுத்தினேன் என்று ஆ. ராசா விளக்கம்
- 13:39 (IST) 31 Mar 2021தமிழகத்தில் தளர்வுகளுடன் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 13:32 (IST) 31 Mar 2021ஆ. ராசா
முதல் அமைச்சரின் தாயார் குறித்து சர்ச்சையான வகையில் பேசியதாக ஆ. ராசா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில் அவரின் கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
- 13:14 (IST) 31 Mar 2021ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணியோடு பிரச்சாரம் முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணியோடு பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
- 12:47 (IST) 31 Mar 2021நல்ல அரசியல் தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?
வாசுதேவநல்லூர் தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்க கூறிய வழக்கை விசாரித்த போது வாக்குகளை பணத்திற்காக விற்றுவிட்டு எப்படி நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எதிர்பார்க்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்புயுள்ளது.
- 12:45 (IST) 31 Mar 2021இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கும் வெப்பநிலை
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 - 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:01 (IST) 31 Mar 2021ராஜீவ்காந்தி நினைவிடத்திலிருந்து பரப்புரையை தொடங்கும் பிரியங்கா!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, பின்னர் அங்கிருந்து அவர் பரப்புரையை மேற்கொள்கிறார்.
- 11:29 (IST) 31 Mar 2021அதிமுக அரசு மக்களை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை
தேனி, போடிநாயக்கனூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது, கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை என்றும் ஓபிஎஸ் முதல்வராக, துணை முதல்வராக இருந்து, போடி தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் செய்திருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
- 11:27 (IST) 31 Mar 2021தங்கம் விலை மேலும் குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:58 (IST) 31 Mar 2021தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகிதான் போகும் - கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டபோது, 'தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகிதான் போகும்' என்று கூறியுள்ளார்.
- 10:53 (IST) 31 Mar 2021கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று உரையாடிய ஒரே அமைச்சர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நவம் பட்டி, ஜீவாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, "கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று நோயாளிகளுடன் உரையாடிய ஒரே அமைச்சர் நான்தான்" என்று கூறி வாக்கு சேகரித்தார்.
- 10:50 (IST) 31 Mar 2021அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
கொரோனாவிலிருந்து மேலும் 41,280 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 1,62,468 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 10:39 (IST) 31 Mar 2021தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் வாக்கு பதிவு
வருகிற ஏப்ரல் 6-ம் தேதி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் வாக்கு பதிவு நடைபெறுகிறது. சென்னையில் 16 மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.