News Highlights: சபரீசன் வீட்டில் ரெய்டு; ராகுல் காந்தி- திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

Tamil Nadu Assembly Election Live மதுரை, நாகர்கோவிலில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

sabareesan, சபரீசன், ஐ.டி.ரெய்டு,

Tamil Nadu Assembly Election Live : 02/04/2021 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐ.டி.துறையினர் சோதனை நடத்தினர். முக ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் நேற்று ஐ.டி. ரெய்ட் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன.

தமிழக தேர்தல் வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 138 திமுகவினர் மீதும், 46 அதிமுகவினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்யவுள்ளார். இதையடுத்து மதுரை, நாகர்கோவிலில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் காலை 11.30 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் வரும் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால், இயல்பை விட வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, தஞ்சை, மதுரை உள்பட தமிழகத்தின் 26 மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.01 கோடியாக அதிகரித்துள்ளது. 10.48 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 28.39 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.58-க்கும், டீசல் ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
7:36 (IST) 2 Apr 2021
தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

தமிழக சட்டசபைதேர்தல் பணிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில், வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்” – என்று தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

6:23 (IST) 2 Apr 2021
“சோதனையை தொடர்ந்து நடத்துங்கள், அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் – ஸ்டாலின்

தமிழக சட்டசபைதேர்தல் பணிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில், வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “சோதனையை தொடர்ந்து நடத்துங்கள், அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும்” சோதனையில் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

5:13 (IST) 2 Apr 2021
ரெய்டு பற்றி கவலை இல்லை – திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், “எத்தனை ரெய்டு நடத்தினாலும் கவலை இல்லை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்திட அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றும், கடைசியாக 'ரெய்டு' எனும் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

5:10 (IST) 2 Apr 2021
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு; காங்கிர தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

தோல்வி பயம் ஏற்படும்போதெல்லாம் பாஜக கடைப்பிடிக்கும் வழிமுறைதான் வருமானவரி சோதனை என்று ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

5:06 (IST) 2 Apr 2021
கடைசியாக ‘ரெய்டு’ எனும் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் – ஸ்டாலின்

திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்திட அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடைசியாக 'ரெய்டு' எனும் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

4:47 (IST) 2 Apr 2021
வருமான வரி சோதனை மூலம் வெற்றியை தடுக்க முடியாது – முத்தரசன்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டிருப்பது என்படு அரசியல் உள்நோக்கம் உடையது. ஆகவே, இந்த வெற்றிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில், வருமான வரித்துறையை பயன்படுத்தி சோதனை மேற்கொள்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சோதனைகளின் மூலம் எங்களுடைய வெற்றியை ஒருபோதும் தடுத்து நிறுத்த தடுக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

4:41 (IST) 2 Apr 2021
ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு

விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பின்போது, ஆரத்தி எடுத்த வக்காளர்களுக்கு பணம்கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3:22 (IST) 2 Apr 2021
‘ஐ.டி ரெய்டுகள் மூலம் திமுக, கூட்டணி கட்சிகளை பணிய வைத்துவிட முடியாது’ – திருமாவளவன்

பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வருமானவரி சோதனைகளால் திமுக கூட்டணியைப் பணிய வைத்திட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

2:52 (IST) 2 Apr 2021
வருமான வரிசோதனை நடத்தி மிரட்டுகிறார்கள்; அது பலிக்காது – கனிமொழி கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, “அதிமுகவின் தோல்வி பயத்தால் திமுகவினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடக்கிறது. வருமானவரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள். அது பலிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

2:26 (IST) 2 Apr 2021
அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய வீடியோ வெளியானது. அதன் பேரில் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1:59 (IST) 2 Apr 2021
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜியின் வீட்டில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

1:57 (IST) 2 Apr 2021
திமுக எம்.பி., அண்ணாதுரை சோதனை

திருவண்ணாமலை திமுக எம்.பி., அண்ணாதுரை வீட்டில் தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1:50 (IST) 2 Apr 2021
வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. பாஜக அரசின் உந்துதலால் எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெறுவதாக திமுக தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளது.

1:49 (IST) 2 Apr 2021
திமுக, காங்கிரஸ் கட்சியினர் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும்

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்படும் என்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நரேந்திர மோடி மதுரையில் பேச்சு

1:31 (IST) 2 Apr 2021
திமுகவை முடக்கிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறது பாஜக

வருமானவரி சோதனை தொடர்பாஜ காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிராக திமுகவிற்கு கூட்டணிக்கட்சிகள் துணை நிற்கும் என்றும், வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை முடக்கிவிடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1:01 (IST) 2 Apr 2021
மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல

ஸ்டாலினின் மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் ஸ்டாலின் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல!

அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்!

உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்.
— M.K.Stalin (@mkstalin) April 2, 2021
12:39 (IST) 2 Apr 2021
தமிழில் உரையாடிய மோடி!

'வெற்றி வேல், வீர வேல்! எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா?' என்றுகூறி மதுரை பொதுக்கூட்டத்தில் தன் உரையை தொடங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. மேலும், உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை என்றும் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது என்றும் கூறினார்.

12:30 (IST) 2 Apr 2021
மக்கள் மீது அக்கறை கொண்டவர் மோடி – முதலமைச்சர் பழனிசாமி

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுபவர் மற்றும் நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்றும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர் அவர் என்றும் முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

12:00 (IST) 2 Apr 2021
எந்த சலசலப்புக்கும் திமுக அஞ்சாது – ஸ்டாலின்

திமுக பனங்காட்டு நரி. வருமான வரிச்சோதனை நடத்தி திமுகவை பணிய வைக்க முடியாது. மிசாவையே எதிர்கொண்டவர்கள் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்கள் என்று தன் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11:22 (IST) 2 Apr 2021
இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது – முத்தரசன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

11:11 (IST) 2 Apr 2021
ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது – துரைமுருகன்

ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றும் அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

11:06 (IST) 2 Apr 2021
ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம் – துரைமுருகன்

மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது. மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம். மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல. வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

10:48 (IST) 2 Apr 2021
செந்தாமரை வீட்டில் தேய்த்து குறித்து தோல் திருமாவளவன் ட்வீட்!

திமுக தலைவரை ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்ற ரெய்டு, பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு என்றும் திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு என்றும் விசிக தலைவர் தோல் திருமாவளவன் ட்வீட் செய்திருக்கிறார்.

10:45 (IST) 2 Apr 2021
திமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரெய்டு

அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.

10:44 (IST) 2 Apr 2021
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. ரெய்டு

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். மேலும், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Web Title: Tamil nadu assembly election live updates modi campaign eps bjp admk tamil news

Next Story
கொல்கத்தா பேரணி : வங்கத்துப் புலிகளே உங்களுக்கு அன்பு வணக்கங்கள்… தமிழில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்Mamata Banerjee Kolkata Rally Today LIVE Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express