தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்ற நிலையில் தமிழகத்தில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் குறித்த தினமும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் மிகவும் பலம் வாய்ந்த மூன்று அமைச்சர்களின் தொகுதிகளை விரிவாகப் பேச உள்ளோம். அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தங்கமணி மற்றும் சி.வி.சண்முகம் போட்டியிட இருக்கும் தொகுதிகள் குறித்தும் அவர்களுக்கு எதிராக தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் குறித்தும் இங்கே காண்போம்.
எஸ்.பி. வேலுமணி
கோவையில் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான ஒரு பெயர் எஸ்.பி. வேலுமணி என்றால் மிகையாகாது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். அதிமுக சார்பில் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு அவருக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டது.
அவரை எதிர்த்து திமுக சார்பில் களத்தில் இறக்கப்பட்டுள்ளார் கார்த்திகேய சிவசேனாதிபதி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அடிக்கடி பேசப்பட்ட ஒரு பெயராக இருந்து, நாட்டு மாடுகள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் என்று பல்வேறு விசயங்களில் கவனம் செலுத்திய அவர் திமுகவின் சுற்றுச்சூழல் அணி செயலாளராக பொறுப்பேற்றார். காங்கேயம் தொகுதியில் போட்டிய வேண்டும் என்று விருப்ப மனு அவர் அளித்திருந்த போதும் அவருக்கு தொண்டாமுத்தூர் தொகுதி கொடுக்கப்பட்டது அவருக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே தொகுதியில் கமல் ஹாசன் முதலில் ஸ்ரீநிதி என்பவரை வேட்பாளராக அறிவித்து பின்னர், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை யோசித்து ஷாஜகான் என்பவரை களம் இறக்கியுள்ளார்.
மேலும் படிக்க : எடப்பாடியாரின் தொகுதி வரலாறு தெரியுமா உங்களுக்கு?
பி. தங்கமணி
மின்சாரத்துறை அமைச்சர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீரவை அமைச்சராகவும் பணியாற்றும் பி. தங்கமணி குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். 2011ம் ஆண்டு திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு குமாரபாளையம் தொகுதி உருவாக்கப்பட்டது. விசைத்தறி மற்றும் ஜவுளி தொழில் இங்கு பிரதானமாக இருக்கிறது.
2016ம் ஆண்டு தேர்தலில் பி. தங்கமணி இங்கே போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பி. யுவராஜ் போட்டியிட்டார். தேமுதிக சார்பில் பி. ஏ. மாதேஸரன் போட்டியிட்டார். அன்றைய தேர்தலில் அதிமுக 1 லட்சத்தி மூவாயிரத்து 32 வாக்குகளை பெற்றது. 2011ம் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் பி. தங்கமணி. அவரை எதிர்த்து திமுக சார்பில் செல்வராஜூ போட்டியிட்டார். பாஜக சார்பில் கே.எஸ். பாலமுருகன் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் பி. தங்கமணி 91077 வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். திமுக சார்பில் இங்கு எம். வெங்கடாசலம் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் காமராஜும் நாம் தமிழர் கட்சி சார்பில் க. வருணும் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க : அம்மாவின் விருப்ப தொகுதி வெற்றி பெறப்போவது யார்?
சி. வி. சண்முகம்
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார் சி.வி. சண்முகம். ஏற்கனவே இரண்டு முறை அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் அவர். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர். லட்சுமணன் போட்டியிடுகிறார். அவர் அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தற்போது திமுகவில் இணைந்து போட்டியிடுகிறார். இந்த பகுதியில் திமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் அதிமுக 5 முறையும், திமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெ.செல்வமும், அமமுக சார்பில் பாலசுந்தரமும் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க : கொங்கின் சங்க நாதம் கோட்டையில் முழங்கட்டும்; கோவை தெற்கில் வெல்லப் போவது யார்?
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது சி.வி. சண்முகம் 69 ஆயிரத்து 421 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதித்து போட்டியிட்ட அமீர் அப்பாஸ் 47, 130 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் சி.வி. சண்முகமும் திமுக சார்பில் பொன்முடியும் போட்டியிட்டனர். சி.வி. சண்முகம் 90, 304 வாக்குகளை பெற்றுள்ளார். பொன்முடி 78,207 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.