Tamil Nadu lok sabha election results 2019: 2019 பாராளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்? என்பதை நிர்ணயம் செய்கிறது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக, எக்ஸிட் போல் முடிவுகளை உறுதி செய்கிறதா?
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் திருப்பங்கள் எந்தவொரு த்ரில்லர் சினிமாவுக்கும் குறைந்ததல்ல. கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களை திரட்டி பலம் காண்பித்த சசிகலா, முதல்வர் பதவியேற்க தயாரான தருணத்தில் சிறைக்கு சென்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/AIADMK-Factions-merger-300x217.jpg)
Tamil Nadu election results 2019: பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2019
அதன்பிறகு டிடிவி தினகரன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் நாளடைவில் அவரை தூக்கி எறிந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கை கோர்த்தார்கள். சற்றும் சளைக்காத டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தந்த வெற்றி பெருமிதத்துடன் தனிக்கட்சி உருவாக்கி, இந்தத் தேர்தலை எதிர் கொண்டார்.
20 மக்களவைத் தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் அதிமுக, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கி மெகா அணி பலத்துடன் களம் கண்டது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மத்திய சென்னை தொகுதியை மட்டும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சிய 37 தொகுதிகளில் தனித்து களம் கண்டது.
அதிமுக.வில் இரட்டைத் தலைமை என்ற அடிப்படையில் உள்ளுக்குள் குமுறல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சீனியர்களில் ஒருவரான மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் அவ்வப்போது எதிர் குரல் எழுப்புவது அதன் விளைவுதான். அண்மையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை ராஜினாமா செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தத் தேர்தலில் அதிமுக பெறுகிற வெற்றியைப் பொறுத்தே, இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பால் கட்சியைக் கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல முடியும். எனவே அதிமுக எதிர்காலத்திற்கு இது முக்கியமான தேர்தல்.
அதேபோல அதிமுக.வில் ஒரு தரப்பினரை இணைத்துக் கொண்டு தனிக்கட்சி நடத்தும் டிடிவி தினகரனும் இதில் பெறுகிற வாக்கு விகிதத்தைப் பொறுத்தே, அவரது எதிர்காலம் அமையும். இல்லாதபட்சத்தில் அவருடன் இருக்கிற நிர்வாகிகள் பலரே எடப்பாடி பழனிசாமியைத் தேடிச் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்? என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்தலாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் அமைகிறது.