புயல், வெள்ளம், கொரோனா பொதுமுடக்கம் என பல தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு நொந்துபோயிருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.12,110 கோடி கூட்டுறவு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 31.01.2021 வரை நிலுவையில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்திருப்பது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்பது அரசியல் கட்சிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற கட்சிதான் விவசாயக் கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கும் என்பது நடந்து வந்துள்ளது. ஆனால், இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். இதன் மூலம், 16.3 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது முதல்வர் கருணாநிதி 7,000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.
அதற்குப் பிறகு, 2008ம் ஆண்டு 60,000 கோடி ரூபாய் நாடு முழுவதும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா, 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.
கடந்த ஆண்டு விவசாயிகள், புயல், வெள்ளம், கொரோனா பொதுமுடக்கம் என பல விதங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு முடங்கிப் போயிருந்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் வாக்குறுதியாக ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்பதை முன்வைப்பார்கள் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்பே, முதல்வர் பழனிசாமி இன்று 12.110 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை ரத்து செய்து அறிவித்துள்ளார். நிச்சயமாக, இந்த அறிவிப்பு வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரதிபலிக்கும் என்று ஆளும் அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோ, திமுகவோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிகளும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்ற வாக்குறுதியை மீண்டும் அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் அறிவித்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால், தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்து அறிவித்திருப்பது நிச்சயமாக விவசாயிகளை கடன் சுமையில் இருந்து விடிவித்து நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துள்ளது. கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு மீண்டும் புதிய கடன்களை அரசு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் தேசிய வங்கிகளில் விவசாயக் கடன்கள் மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேசிய வங்கிகளில் விவசாய கடன்கள் சுமார் 3,000 கோடி முதல் 4,000 கோடிகளுக்குள் தான் இருக்கும். அதனால், அனைத்து விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து தமிழக விவசாயிகளின் விவசாயக் கடன் விவரங்களைப் பெற்று அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன்னதாகவே தமிழக முதல்வர் பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளதால், சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் தேசிய வங்கிகளில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்று நீளுமா என்பது தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.