தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 7 மணியுடன் நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, மாலை 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சில வாக்குசாவடிகளில் 7 மணிக்கு முன்பாக வாக்குப் பதிவு செய்ய வரிசையில் நின்று இருந்தவர்கள் வாக்களிப்பதற்காக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திமுக எம்.பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து ஆம்புலன்ஸில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இன்று அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அணுப்பும் பணிகள் தொடங்கியது.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “ 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்களுடைய ஈவிஎம், வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களை வழக்கமாக எப்படி சீல் வைத்து மண்டல அலுவலருக்கு கொடுத்து அதற்குப் பிறகு ரிசப்ஷன் செண்டருக்கு கொடுக்க வேண்டும். இது எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டிய வேலைகள். அவர்கள் எல்லோரும் இந்த வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். அதனால், வாக்குப்பதிவு தகவல் முழுவதும் போன் மூலமாக வாங்கியிருக்கிறோம். இது ஒரு தோராயமான வாக்குப்பதிவு சதவீதம்தான். வாக்குப்பதிவு இயந்திங்களை இரவு 12, 1 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொடுத்த பிறகுதான், உண்மையான வாக்குப்பதிவு எண்ணிக்கை கூற முடியும். அதனால், இந்த வாக்குப்பதிவு சதவீத எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் மேலே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மாலை 7 மணி வரைக்கும் 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எங்கும் பதிவாகவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்த புகார்கள் நமக்கு வரவில்லை. ஈ.வி.எம், வி.வி.பி.ஏ.டி பழுது சீர் செய்ய வேண்டும் என்பது போன்ற புகார்கள் கொஞ்சம் வந்தது. சின்ன சின்ன புகார்களாகத்தான் வந்தது. இன்று எல்லா இடத்திலும் வாக்குப்பதிவு முடிந்தது. நாளைக்கு ஆய்வு நடைமுறை மண்டல தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடக்கும். அப்போது ஏதாவது தவறு இருந்தால், அதை சொல்வார்கள். நாங்கள் அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதற்குப்பிறகுதான் முடிவெடுக்கப்படும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வுகள் இருக்கும். நாளை முதல் பணம் பறிமுதல் நடவடிக்கை இருக்காது. ஒரு சில கண்காணிப்பு எல்லாம் இருக்கும். அதைப் பற்றி நாங்கள் பின்னர் தெரிவிக்கிறோம்.
தமிழகத்தில் மொத்தம் 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மையத்திலும் முதல் வட்டத்தில் சிஏபிஎஃப் பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள். அடுத்தது மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறோம். பிறகு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை அத்தனை நாளுக்கும் 24 மணிநேரமும் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு இருக்கும். அங்கே ஜெனரேட்டர் எல்லாம் இருக்கும். அரசியல் கட்சி முகவர்கள் அங்கே 24 மணிநேரமும் இருக்கலாம்.” என்றுகூறினார்.
மேலும், சத்ய பிரதா சாகு, தமிழகத்தில் மாலை 7 மணி வரை மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதங்களின் எண்ணிக்கையை வெளியிட்டார். அதில்,
1.திருவள்ளூர் 68.73%
2.சென்னை 59.40%
3.காஞ்சிபுரம் 69.47%
4.வேலூர் 72.31%
5.கிருஷ்ணகிரி 74.23%
6.தருமபுரி 77.23%
7.திருவண்ணாமலை 75.63%
8.விழுப்புரம் 75.51%
9.சேலம் 75.33%
10.நாமக்கல் 77.91%
11.ஈரோடு 72.82%
12.நீலகிர் 69.24%
13.கோயம்புத்தூர் 66.98%
14.திண்டுக்கல் 74.04%
15.கரூர் 77.60%
16.திருச்சி 71.38%
17.பெரம்பலூர் 73.08%
18.கடலூர் 73.67%
19.நாகப்பட்டினம் 69.62%
20.திருவாரூர் 74.90%
21.தஞ்சாவூர் 72.17%
22.புதுக்கோட்டை 74.47%
23.சிவகங்கை 68.49%
24.மதுரை 68.14%
25.தேனி 70.47%
26.விருதுநகர் 72.52%
27.ராமநாதபுரம் 67.16%
28.தூத்துக்குடி 70.00
29.திருநெல்வேலி 65.16%
30.கன்னியாகுமரி 68.41%
31.அரியலூர் 77.88%
32.திருப்பூர் 67.48%
33.கள்ளக்குறிச்சி 78.00%
34.தென்காசி 70.95%
35.செங்கல்பட்டு 62.77%
36.திருப்பத்தூர் 74.66
37.ராணிப்பேட்டை 74.36%
என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.