நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : வெற்றி யாருக்கு?

Vikravandi, Nanguneri Result Expectations : 24ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி துவங்கும்.

By: October 23, 2019, 11:43:55 AM

TN by-polls Vikravandi, Nanguneri Result Expectations: தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் 21ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் உறுதி மொழிகள் அளித்தனர். தற்போது இவ்விரண்டு தொகுதிகளிலும் வெற்றியை யார் தக்க வைப்பது என்ற கேள்வி அனைவர் மனதிலும் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல்களைப் போல் இந்த இரண்டு தேர்தல் முடிவுகளும் அமைந்துவிட்டால் அது திமுகவிற்கு 2021 தேர்தலுக்கான வார்ம்-அப்பாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த இரண்டு தொகுதி தேர்தல்களையும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியும் புறக்கணித்தன. அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் என மும்முனை போட்டியாக அமைந்தது இந்த தொகுதிகளுக்கான தேர்தல்.

விக்கிரவாண்டி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்திருக்கிறது இந்த சட்டமன்ற தொகுதி. 2008ம் ஆண்டு தொகுதி மறுசீராய்வுக்கு பின்பு உருவான இந்த தொகுதியில் முதலில் சி.பி.எம் கட்சி வெற்றியை தக்க வைத்தது. 2016ம் ஆண்டு தேர்தலின் போது திமுகவை சேர்ந்த ராதாமணி வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததால் தற்போது இந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. வன்னியர்கள் மற்றும் பட்டியல் இனத்தோர் கணிசமாக வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க : யாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்?

ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. 2016ம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவிற்கு அடுத்து அதிகப்படியான வாக்குகளைப் பெற்று 3ம் இடத்தை தக்க வைத்தது பாமக. அதனால் அதிமுகவின் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சிலர் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர். அதே நேரத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனைக் காட்டிலும் கூடுதலான வாக்குகள் பெற்று விசிகவின் ரவிக்குமார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் ந.புகழேந்தி போட்டியிட்டார். அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வன் போட்டியிட்டார். நாம் தமிழர் சார்பில் கந்தசாமி  போட்டியிட்டார்.

Votes turnout : விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குகள் பதிவாகின.

நாங்குநேரி தொகுதி

நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த எச். வசந்தகுமார், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. திமுக கூட்டணில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளரான ரூபி மனோகரனை களம் இறக்கியது. அதிமுகவில் இருந்து ரெட்டியார்பட்டி நாராயணன் களம் இறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் போட்டியிட்டார்.  இந்த தொகுதியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. கிடப்பில் போடப்பட்டிருக்கும் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்பு மீண்டும் செயல்படுத்துவோம் என்று திமுக நம்பிக்கை அளித்துள்ளது.

அதிமுக தரப்பு ஆட்சியில் இருக்கும் போதே இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. அப்பகுதியில் அமைந்திருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்தன. குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், மற்றும் வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளை சேர்ந்த மக்களை தேவேந்திர குல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்து தேர்தலை புறக்கணித்தன.

Votes turnout : நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகின.

தந்தி டிவி Exit poll results

தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அறிவித்துள்ளது. தந்தியின் எக்ஸிட் போல் முடிவுகள் இதோ!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதிமுக கூட்டணி – 46-52%

திமுக கூட்டணி – 44-50%

நாம் தமிழர் – 2 -5%

மற்றவை – 2-5%

நாங்குநேரி இடைத்தேர்தல்

அதிமுக கூட்டணி  – 46-52%

காங்கிரஸ் கூட்டணி – 42-48%

நாம் தமிழர் – 4-7%

மற்றவை – 2-5%

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Election News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu vikravandi nanguneri by election results preview

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X