தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 2-ந் தேதி எண்ணப்பட்ட நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தொடர் வெற்றியை பெற்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்த அதிமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வராக பொறுப்பேற்ற ஒ.பன்னீர்செல்வம் அதற்கடுத்த சில நாட்களிலேயே பதவியில் இருந்து இறக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றது அனைவரும் அறிந்தே. இந்த சர்ச்சையில் வெளியேறிய ஓபிஎஸ், தர்மயுத்தம் நடத்தி மீண்டும் கட்சியில் இணைந்தாலும் அவருக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அன்று முதல் இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக வெளிப்படையாக கூறிக்கொண்டாலும், இருவருக்கும் இடையே இருக்கும் பனிப்போர் அவ்வப்போது வெளியில் தெரிந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனாலும் இருவரும் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதாக அவ்வப்போது நமக்கு உணர்த்த முயற்சி செய்தனர். ஆனால் சட்டசபை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி வரும்போது இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தது.
இதில் மீண்டும் முதல்வர் பதவியை அடைய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த முறை விட்டுக்கொடுத்த பதவியை மீண்டும் பிடிக்க ஒபிஎஸ் என இருவரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த விவாதத்தின்போது ஓபிஎஸ் தனது சொந்த ஊரான தேனிக்கும், இபிஎஸ், சேலத்திற்கும் பறந்தனர். இடையில் இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் இருவருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தி, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஒருமனதாக தேர்தந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒபிஎஸ் அரைமனதுடனே சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் இபிஎஸ் தனி ஆளாக முடிவெடுத்து செயல்படுத்த தொடங்கினார். தேர்தலில் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்னையும் அவர் ஒருவராகவே செயல்படுத்தினார். இதில் ஒபிஎஸ் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு மட்டும் எம்எல்ஏ சீட்டுக்கு சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த தேர்தலில் ஒபிஎஸ் தலைமையிலான தமிழகத்தின் தென் பகுதியில் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. மேலும் ஓபிஎஸ் சிபாரிசு செய்த வேட்பாளர்கள் பலர் தோல்விய தழுவிய நிலையில், மதுரையில் மட்டும் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கொங்கு மாவட்டங்களில் அதிமுக எதிர்பார்த்ததை விட தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டசபையில் 66 எம்எல்ஏக்களுடன் அதிமுக எதிர்கட்சியாக அமர உள்ளது. ஆனால் தற்போது எதிர்கட்சி தலைவர் யார் என்பதில் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நிலையில், தற்போது எதிர்கட்சி தலைவர் பதவியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஒ.பன்னீர்செல்வமும், அதிக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என் முணைப்புடன் எடப்பாடி பழனிச்சாமியும் களமிறங்கியுள்ளர்.
இந்த பதவி தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதை உணர்த்தும் விதமாக, இதுவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருடன் அதிமுக அறிக்கைகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஒபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் பெயர் மட்டும் அச்சிடப்பட்ட லெட்டர்பேடை பயன்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் பலியான விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்திய ஓபிஎஸ் இந்த அறிக்கை, வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுகவினரால் அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது, வெளியான அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பெயர் அச்சிடப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை விவகாரத்தில் ஓபிஎஸ் தனது தனி அடையாளத்தை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைக்க உள்ள ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ள புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவொம் என்று நம்பிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் தேர்தல் முடிந்து இதுவரை அவர் எந்த அறிவிப்பு அல்லது கருத்தகள் எதுவும் கூறமால் அமைதிகாத்து வருகிறார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத பழனிச்சாமியை, தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் மரியாதை நிதித்தமாக சந்தித்து வருகின்றனர்.
ஆனாலும் அவர்களிடம் பழனிழச்சாமி, முன்புபோல் அதிகம் பேசுதில்லை என்றும், ஒருசில நிமிடங்களில் இந்த சந்திப்பு முடிந்து விடுவதாகலும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கட்சியை முழுமையாக கைப்பற்றும் தருணத்தை எதிர்பார்த்து பழனிச்சாமி அமைதி காத்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil