Tamilnadu Assembly Election 2021 : தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஊடகங்கள் தரப்பில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தங்களது கருத்தக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் பல தொகுதிகளில் ஊடகங்களின் கணிப்புகள் மாறுப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாலைமுரசு வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமையப் போகிறது, எந்தெந்த இடங்களில் கடும் போட்டி இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாலை முரசு சார்பில் இதுவரை ஏழு நாள்கள் கருத்துக்கணிப்பு விபரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், 8-வது நாளான இன்றைய கருத்துக்கணிப்பில், 25 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு விவரங்கள் வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில், எழும்பூர், துறைமுகம், அண்ணாநகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிக நகர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 19 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேளச்சேரி, ஆர்கே நகர்,மயிலாப்பூர், செங்கல்பட்டு, ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. மேலும் மதுரவாயல், தி.நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் இரு கூட்டணிகளும் சம பலத்தில் உள்ளதால் இந்த இரண்டு தொகுதிகளிலும் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலை முரசு சார்பில்,இதுவரை 208 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்துள்ளது.
இதில் திமுக கூட்டணி 136 இடங்களிலும், அதிமுக கூட்டணி 47 இடங்களிலும் முன்னிலை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமமுக 1 இடம் பெறுகிறது. 24 இடங்களில் இழுபறி நீடிக்கிறது. தொடர்ந்து அனைத்துக் கட்சியிலும் உள்ள நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது இனி வெளியாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil