60 சீட் பட்டியல் கொடுத்த அமித் ஷா: சசிகலா தரப்புக்கு உள் ஒதுக்கீடு?

Tamilnadu Assembly Election 2021 : அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 60 தொகுதிகளுக்கு பட்டியல் கொடுத்துள்ள நிலையில, சசிகலாவின் அமமுகவிற்கும் சேர்த்து தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu Assembly Election BJP Seat Sharing : தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒரு பக்கம் தொகுதிப்பங்கீடு தொடர்பாக விவாதங்கள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுடன் நேற்று முன்தினம் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜகவுடன், தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடைபெற்றது. புதுச்சேரி மற்றும், காரைக்காலில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.

இதில் வரும் சட்டமன்ற தேர்தலில், பாஜக தரப்பில் 60 தொகுதிகள் கேட்டு பட்டியல் கொடுத்த்தாகவும், அதில் 40 தொகுதிகளுக்கு மேல் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் பாஜக தரப்பில் சசிகலாவுக்கு சேர்த்து தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான சசிகலா, சிறை சென்றபின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து விடுதலையான அவர் டிடிவி தினகரனின் அமமுகவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக சார்பில் பல அமைச்சர்கள் தலைமை நிர்வாகிகள் என அனைவரும் அறிவிக்கை வெளியிட்டுள நிலையில், தற்போது பாஜக சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் தொகுதிகள் கேட்பது அதிமுக கட்சியினரிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் கட்சியின் முத்த நிர்வாகிகள் அனைவரும், சசிகலா கட்சியில் இணைவது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக, நீங்கள் நேரடியாக சசிகலாவுக்கு தொகுதிகள் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்களுக்கும் சேர்த்து எங்களிடம் கொடுங்கள் நாங்கள் அவர்களிடம் கொடுத்து விடுகிறோம் என்றும், மேலும் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படாது என்று உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாஜக 60 தொகுதிக்கு பட்டியல் கொடுத்து 30 தொகுதிக்குமேல் கேட்பதும் அதிமுகவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தேசிய கட்சியாக பாஜகவுக்கு தமிழகத்தில் வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவுக்கு 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்கினால் பாமகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று அதிமுக எண்ணுகிறது.

இந்நிலையில், பாஜகவுடனான தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று இரவு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாமகவை விட அதிகமான தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க அதிமுக தயாராக இல்லை என்பதால், பாஜகவுக்கு 21 தொகுதிக்கள் மட்டுமே ஒதுக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதில் வழக்கமாக பாமக 30-க்கு மேற்பட்ட தொகுதிகளின் போட்டியிடும் நிலையில், இந்த முறை வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், தொகுதிகளை குறைத்துக்கொண்டோம் என்று பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election 2021 bjp seat sharing form aiadmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com