Tamilnadu Assembly Election Candidate Different Campaign : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சீமான் ஆகிய 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இந்த தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், வித்தியாசமாக பிரச்சாரம் மேற்கொண்ட ஒரு சில வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம் தொகுதி)
கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்ற தவறிய திமுக இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் திமுக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் பிரச்சாரத்திற்கு செல்லும் திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களை கவர வித்தியாசமான யுக்தியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதிய திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, சின்மாய் நகர் மற்றும், வேதா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஹோட்டல் ஒன்றில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் வணிகர்கள் சார்பாக சட்டமன்றத்தில் பேசுவேன் என்று கூறினார்.
திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் (மேட்டுப்பாளையம் தொகுதி)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முக சுந்தரம், பிரச்சாரம் மேற்கொண்டபோது ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்களுடன் சேர்ந்து கில்லி படத்தில் வரும் ‘’அப்படி போடு அப்படி போடு’’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாமக வேட்பாளர் திலகபாமா (ஆத்தூர் தொகுதி)
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் கவிஞர் திலகபாமா, பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கலைக்குழுவுடன் சேர்ந்து தப்படித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
நாமக்கள் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் :
நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியுள்ள பொம்மைக்குட்டைமேடு பகுதியை சேர்ந்த வேட்பாளர் ரமேஷ், கிரிக்கெட் வீரர் போன்ற வேடமிட்டு அப்பகுதியில் வாக்கு சேகரித்துள்ளார். திடீரென ஒருவர் கிரிக்கெட் வீரர் வேடத்துடன் வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது.
அதிமுக வேட்பாளர் கே.பி கந்தன் (சோழிங்கநல்லூர் தொகுதி)
சென்னை சோழிங்கநல்லுர் தொகுதியில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் கே.பி கந்தன், கண்ணகி நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், மான்கொம்பு தீப்பந்தம் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார்.
தேர்தல் வந்தாலே வேட்பாளர்கள் வாக்களர்களை கவர வித்தியசமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாதிரியான பிரச்சாரங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"