குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?

TN Assembly Election : குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 ஊக்க தொகை வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

TN Assembly election 2021 : திருச்சியில் நேற்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்து விட்டார் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்களுடன் நேர்காணல் என தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதில் சட்டமன்ற தேர்தல் தேதி அளிவிக்கப்படும் முன்பே கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. முதல் ஆளாக பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் கிராமசபை கூட்டத்தை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து அதிமுக தரப்பில், முதல்வர் பழனிச்சாமி, காங்கிரஸ் தரப்பில், ராகுல்காந்தி, பாஜக தரப்பில், அமித் ஷா, மக்கள் நீதி மய்யம் சார்பில், நடிகர் கமல்ஹாசன் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 2018-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்து சந்தித்து கனிசமான வாக்குகளையும் பெற்றார். அந்த தேர்தலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தை மீட்டெடுப்போம் என்ற பெயரில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறிய அவர் தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்த சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி, திமுகவில் இருந்து பிரிந்த பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதில் ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக தலைமையில் 2 அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் தலைமையில், 3-வது அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் 7 அம்ச திட்டங்களை அறிவித்திருந்தார்.

இதில் முக்கிய திட்டமாக வீட்டில் வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதங்தோறும் ரூ 1000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் நேற்று திருச்சியில் திமுக சார்பில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குடும்ப அட்டை வைத்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் திட்டத்தை காப்பி அடித்துவிட்டார். குடும்ப பெண்களுக்கு ஊக்க தொகை அளிப்பது தொடர்பான திட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஸ்டாலின் இந்த திட்டத்தை காப்பியடித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளா.  மக்கள் நீதி மய்யம் எழுதி வைத்த காகிதங்கள் பறந்து சென்று ஸ்டாலின் கையில் துண்டு சீட்டாக தஞ்சமடைந்துள்ளது. இதை படித்துதான் அவர் திட்டங்களை அறிவிக்கிறார். அவர்களிடம் உண்மையிலேயே எந்த திட்டமும் இல்லை என்று கூறியள்ளார்.

இதனால் தற்போது தமிழத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இந் திட்டத்தை உண்மையிலேயே யார் காப்பியடித்தது என்று அலசி ஆராய்ந்தபோது, ஒரு உண்மை தெரியவந்துள்ளது. அசாமில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 830 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது.  இது தொடர்பான அறிவிப்பைவெளியிட்ட அசாம் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள குடும்ப பெண்களுக்கு நேரடி மானியம் (டிபிஜி) வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் 17 லட்சம் குடும்பங்களை சென்றடைய மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் மாநில பட்ஜெட் ஏற்கனவே ‘இந்த திட்டத்திற்காக ரூ .2,800 கோடியை ஒதுக்கிய நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ .210 கோடி செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்மூலம் தற்போது கமல்ஹாசன் திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்தாரா? அல்லது கமல்ஹாசன் அசாம் மாநில அரசின் திட்டத்தை காப்பியடித்தாரா என் புரியாத புதிராக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Tamilnadu assembly election 2021 dmk stalin vs mnm kamalhaasan

Next Story
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்குக்கர் சின்னம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express