Tamilnadu assembly election 2021: தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ஞாயிற்று கிழமை நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளோடு களம் கண்ட திமுக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் பெற்று வெற்றி பெற்றது.
மதவாத சக்திகளுக்கு எதிராக 12 கட்சிகளுடன் திமுக அமைத்த கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு முஸ்லீம் கட்சிகள் இடம்பெற்று இருந்தன. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 3 தொகுதிகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்த, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் 2 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி, (மணப்பாறை - அப்துல் சமத் 98,077, பாபநாசம் - எம்.எச். ஜவஹிருல்லா 86,567) அந்த இரண்டு தொகுதியையும் கைப்பற்றியது. ஆனால் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் (ஏணி) போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எதிர்த்து போட்டியிட்ட அதிகமுகவிடம் தோல்வியை தழுவியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)