DMK Uthiyanithi Vs BJP Kushboo : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் முதலில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், தற்போது இந்த பட்டியலில் பாஜகவும் இணைந்துள்ளது. கடந்த முறை தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக குறிப்பிட்டு சொல்லும்படி எந்த வெற்றியும் பெறவில்லை.
மேலும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்காக அமைக்கப்பட்ட நோட்டா சின்னத்தை விட பாஜக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக கடுமையான விமர்சனங்களும் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரும் சட்டமன்ற தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெறவேண்டும் என்று பாஜக தலைவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பாஜகவை சேர்த்த தேசிய தலைவர்கள் பலர் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/kushboo.jpg)
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்த பாஜக வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியுடனே களமிறங்குகிறது. இந்த முறை தமிழகத்தில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சி.டி ரவி, தமிழகத்தின் நண்பர்கள் பிரதமர் மோடியும், பாஜகவும்தான். திமுகவும் காங்கிரசும் தமிழத்தின் எதிரிகள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். நீங்கள் அனைவரும் சகோதரி குஷ்புவுக்கு வாக்களிக்க தயாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழத்தில் இருந்து பாஜக சார்பில் எம்,பி எம்எல்ஏ என்று ஒருவர் கூட இல்லை. இது நியாயமா என்று கேட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/kushboo-uthi.jpg)
தமிழக அரசியலில் முக்கிய தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வழக்கமான தொகுதி சேப்பாக்கம். இந்த தொகுதியில் பலமுறை போட்டியிட்ட கருணாநிதி அதில் வெற்றியும் கண்டுள்ளார். தற்போது அவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த தொகுதியில் அவரது பேரனும், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று பரவலாக பேசப்பட்டது. தற்போது பாஜக மேலிட செயற்பாட்டாளர் சி.டி.ரவி குஷ்புவுக்கு வாக்களிக்க தயாரா என்று கேட்டுள்ளதால், இந்த தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டிட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவது தமிழக அரசியலில பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010-14 வரை திமுகவில் இருந்த குஷ்பு கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதன் கூட்டணி கட்சியாக காங்கிரஸில் இணைந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"