Tamilnadu assembly election 2021: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 முதல் துவங்கி உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தங்கள் வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், ‘மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்’ என கூறினார்.
சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதனை சுட்டிக்காட்டும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ‘வீட்டிற்கு அருகே வாக்குச் சாவடி இருந்தாதலும், குறுகலான இடத்தில் காரை நிறுத்தும் இடம் வசதி இல்லை என்பதாலும் விஜய் சைக்கிளில் சென்றார்’ என விஜயின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு பதிவு செய்தது குறித்து பேசிய சேப்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், “பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மந்தைவெளி உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய இரு மகள்களுடன் வந்து வாக்களித்தார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்” பதிவிட்டுள்ளார்.
மேலும் கோவை தெற்கு தொகுதியை பார்வையிட்ட கமல்ஹாசன், அங்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சேலம் முதலமைச்சர் பழனிசாமி, சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்
நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு’ என்று கூறினார்.
தமிழகத்தில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 39.61% வாக்குகளும், புதுச்சேரியில் 53.01% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )