ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தூத்துக்குடியிலும், மத்திய உள்துறை அமைசச்சர் அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா வழக்கம் போல் தமிழர்கள், தமிழ் மொழி, காங்கிரஸ் கட்சியின் முந்தைய ஊழல்கள் குறித்து பேசினார்.
ராகுல் காந்தி புதுவையில் மீன்வளத்துறை இல்லாதது ஏன் எனக் கேட்டிருந்தார். 2019-ல் நீங்கள் விடுமுறையில் இருந்த போது நரேந்திர மோடி ஆட்சி மீன்வள அமைச்சகத்தை நிறுவியது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளாக மீன்வளத்துறை உள்ளது என்பதை அறியாத ஒரு தலைவர் தேவையா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
மேலும், புதுச்சேரியில் நாராயணசாமி அரசு ஊழல் கும்பலுக்கு பணியாற்றியது. புதுச்சேரியின் மேம்பாட்டிற்காக ரூ.15,000 கோடியை மோடி அரசு அனுப்பியது. அந்த பணம் உங்கள் கிராமங்களுக்கு வந்துள்ளதா? அந்த 15,000 கோடி ரூபாயிலிருந்து ஒரு பங்கை டெல்லியில் காந்தி குடும்பத்திற்கு நாராயணசாமி வழங்கினார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
நரேந்திர மோடி புதுச்சேரியை BEST- ஆக மாற்ற விரும்புகிறார். இங்கே BEST என்பது
B- Business - தொழில் மையம்
E- Education - கல்வி மையம்
S- Spiritual - ஆன்மிக மையம்
T- Tourism - சுற்றுலா மையம்
BEST-ஐ கொண்டு பாஜக அரசு, புதுச்சேரியை சிறப்பாக மாற்றும் பணியை மேற்கொள்கிறது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாலை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வெற்றிப் பேரணி நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். பேரணியில் உரையாற்றிய அவர், " தமிழ் மொழியில் பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன். தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள. இந்தியர்கள் மதிக்கின்றனர்" என்று தெரிவித்தார். உலகின் சிறந்த மொழியான தமிழை பேச முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய ராகுல்காந்தி, " ஒருபுறம், அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் அதிகம் வைத்திருக்கிறீர்கள். மறுபுறம், மற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க விடுவதில்லை. எல்லா முரண்பாடுகளையும் கடந்து அவர்கள் ஆட்சி அமைத்தாலும், அவர்களிடமிருந்து மக்களின் ஆணைகள் பறிக்கப்படுகின்றன. நீதிபதிகள் அரசாங்கம் விரும்பும் முடிவுகளை எடுப்பதால் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி ஆகியவை தலைமை தாங்குகின்றன ” என்று தெரிவித்தார்.
நான் வருத்ததோடு கூறுகிறேன், நம் இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது. அதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கம் பெரிய நிதி அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது என்று தெரிவித்தார்.
முன்னதாக, திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோயிலுக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தார்.