TN Assembly Electiom Stalin Vs Kamalhaasan : தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பெரும் பரபரப்பாக இயக்கி வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, நேற்று முதல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
இதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விதிகளை மீறியதாக ஒரு கட்சி மற்ற கட்சிகள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இதில் வரும் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விதிகளை மீறி பிரச்சாரம் நடத்துவதாகவும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், கடந்த சில நாட்களாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கூட்டம் ஒன்றில் பேசியபோது ’கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் என்று கூறினாலே போதும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர்,தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் மீது தனிமனித விமர்சனம் செய்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கமல்ஹாசன் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று திமுகவினர் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"