தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுகவுக்கு திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது. இதில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் திமுகவிற்கு சாதகமாகவே அமைந்தது. இதனால் திமுக தரப்பில் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
அதற்கு ஏற்றார்போல் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். கருத்துக்கணிப்பில் கூறியபடி முழு வெற்றியை நோக்கி நகர்ந்த திமுக மற்றும் அதன் வேட்பாளர்கள் சேர்த்து 150-க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதனால் திமுக 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுகவின் அடுத்த முதல்வராக முக ஸ்டாலின் பொருப்பேற்க உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின், அதன்பிறகு தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், வெற்றியை கொண்டாட இது நேரமல்ல பாதுகாப்ர் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் வெற்றி குறித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள ஸ்டாலின், எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்! என பதிவிட்டுள்ளார்.
மேலும் 6-வமு முறையான ஆட்சியை செலுத்த கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்க ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்கு கிடைத்த பாராட்டு பத்திரமாக நினைத்து இதனை பாதுகாப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்து திமுக, அதன்பிறகு 2011, மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil