Tamilnadu Assembly Election 2021 : திமுக தலைவர் ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி என தற்போது தமிழக தேர்தலில் மும்முணை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும், கடந்த 2 சட்டசபை தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க திமுகவும் களத்தில் முழு மூச்சாக வேலை பார்த்து வருகின்றன.
இந்த தேர்தலுக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே தயாராகிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் முதல் ஆளாக தமிழத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடித்த திமுக நேற்று முன்தினம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டது. இதில் 61 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திமுக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, 173 தொகுதிகள் கொண்ட இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில், முன்னாள் எம்எல்ஏக்கள் 78 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், 12 பெண்களுக்கும் 9 மருத்துவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில், சில பகுதிகளும், சட்டமன்ற தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியும் இணைத்து கொளத்தூர் தொகுதி அறிவிக்கப்பட்டது. இதுவரை 2011 மற்றும் 2016 ஆகிய இரு சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ள கொளத்தூர் தொகுதி தற்போது 3-வது முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.
2011 சட்டமன்ற தேர்தல் :
கொளத்தூர் தொகுதி அறிவிக்கப்பட்ட முதலில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக சார்பில், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் களமிறங்கினார். அவரை எதிர்த்து அதிமுக தரப்பில், சைதை துரைசாமி, பிஎஸ்பி தரப்பில் ஆம்ஸ்ராங், சுயேச்சையாக ஷங்கர் என்பவர் போட்டியிட்டார். இதில், திமுக தரப்பில் ஸ்டாலின், 68,677 வாக்குகளும், அதிமுக தரப்பில் சைதை துரைசாமி 65,943 வாக்குகளும், பிஎஸ்பி ஆம்ஸ்ராங் 4004 வாக்குகளும், சுயேச்சை ஷங்கர் 778 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் 2734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016 சட்டசபை தேர்தல் :
தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அதிமுக தரப்பில், ஜே.சி.டி பிரபாகர், தேமுதிக தரப்பில், மதிவானன், பாஜக தரப்பில் கே.டி.ராகவன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 91,303 வாக்குகள் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரனை 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் 2-வது முறையாக வெற்றி பெற்று முத்திரை பதித்தார்.
2021 சட்டசபை தேர்தல் :
தற்போது 3-வது தேர்தலை சந்திக்கும் கொளத்தூர் தொகுதியில், 3-வது முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது ஸ்டாலினை எதிர்த்து அதிமுக தரப்பில், ஆதி ராஜாராம் களமிறங்கியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில், கெமில்ஸ் செல்வா போட்டியிடுகிறார். கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கொளத்தூர் தொகுதியில், 1,38,181 ஆண் வாக்காளர்களும், 1,44, 050 பெண் வாக்காளர்களும், 68மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,82,299 வாக்காளர்கள் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”