Tamilnadu assembly election 2021 Tamil News: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை செவ்வாய்கிழமை காலை முதல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள தேசிய மற்றும் மாநில காட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் பரப்புரையை நேற்று இரவு 7 மணியோடு முடித்துக் கொண்டன.
நேற்று மாலையோடு தேர்தல் பரப்புரை முடிவடைவதால், பல இடங்களில் வாக்களர்களுக்கு பண பட்டுவாடா மிக தீவிரமாக இருந்தது. அதே வேளையில் தேர்தல் பறக்கும் படையினரும் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பரிசு பொருட்களையும், பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு லஞ்ச பணம் கொடுத்ததாக கூறி இரண்டு அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அதே மாவட்டத்தில், சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் முருகேசனின் வீடு உட்பட இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ .4 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒப்பந்தக்காரரும், விஜயபாஸ்கரின் நெருங்கிய உதவியாளருமான முருகேசனின் வீடு புதுக்கோட்டையின் எஷில் நகரில் உள்ளது. பெயர் சொல்ல விரும்பாத நபர் கொடுத்த புகார் அடிப்படையில், அந்த வீட்டை தேர்தல் அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை செய்தனர். ஆறு மணி நேர தேடலுக்குப் பிறகு, அவரது வீட்டில் இருந்து ரூ .2.57 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், விராலிமலையில் உள்ள மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கொடும்பலூரில் உள்ள மற்றொரு அதிமுக உறுப்பினரிடமிருந்து ரூ .1.44 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு வாக்காளர்களுக்கு லஞ்ச பணம் கொடுத்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )