Tamilnadu assembly election 2021: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றன. இதில் தமிழகத்திற்கான வாக்குபதிவு ஒரே கட்டமான ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிக விறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 91,776 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுரை விளாத்திகுளத்தில் நடந்த பிரச்சாரத்தில் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலில் 'எய்ம்ஸ்' என எழுதி பிரச்சாரம் செய்தார். மேலும் 'மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அதை கையோடு எடுத்து வந்துட்டேன்'என கூறி எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை காண்பித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல்லை உதயநிதி திருடிவிட்டார் என பாஜகவினர் ஒரு புறம் குற்றம் சாட்டினர். இது போன்ற நூதனமான பிரச்சாரம் பலரால் வரவேற்கப்பட்டதோடு, அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகின.
தற்போது, தான் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வென்றுள்ள உதயநிதி, அந்த 'எய்ம்ஸ்' செங்கல்லுடன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)